×

நார்வே செஸ்; 2வது சுற்று போட்டியில் குகேஷ் அதிர்ச்சி தோல்வி

 

ஓஸ்லோ: நார்வே செஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ், 2வது சுற்றுப் போட்டியில் அமெரிக்க வீரர் வெஸ்லி ஸோவிடம் தோல்வி அடைந்தார். நார்வே செஸ் போட்டிகள் ஓஸ்லோ நகரில் நடந்து வருகின்றன. 2வது சுற்றுப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டரும் நடப்பு உலக செஸ் சாம்பியனுமான குகேஷ், அமெரிக்க வீரர் வெஸ்லி ஸோ உடன் மோதினார். இப்போட்டியில் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவிய குகேஷ், வெஸ்லி ஸோ உடன் இணைந்து, 2.5 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார்.

மற்றொரு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டர் அலிரெஸா ஃபிரோஜ்ஸா உடன் மோதினார். இப்போட்டியில் சிறப்பாக ஆடிய பிரக்ஞானந்தா வெற்றி பெறும் நிலையில் இருந்தார். இருப்பினும், அவர் செய்த சில தவறுகளால் அலிரெஸா வெற்றி வாகை சூடினார். இதையடுத்து, அலிரெஸா 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தார். பிரக்ஞானந்தா, நார்வேயை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன் தலா 1.5 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் உள்ளனர்.

மகளிர் பிரிவில் திவ்யா அசத்தல்
மகளிர் பிரிவு 2வது சுற்றுப்போட்டியில், இந்தியாவை சேர்ந்த, இரு முறை உலக ரேபிட் செஸ் சாம்பியன் பட்டம் வென்ற கொனேரு ஹம்பி உடன் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் திவ்யா தேஷ்முக் மோதினார். இப்போட்டியில் சிறப்பாக காய்களை நகர்த்தி, கொனேருவை திக்குமுக்காடச் செய்து திவ்யா அபார வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் கஜகஸ்தான் கிராண்ட் மாஸ்டர் பிபிஸாரா அஸாபயேவா, சீனாவின் ஜு ஜெனெரை வீழ்த்தினார். இதையடுத்து, 2 சுற்றுகள் முடிவில், மகளிர் பிரிவில் பிபிஸாரா 4.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். திவ்யா 3 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார். கொனேரு ஹம்பி 1 புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளார்.

Tags : Norway Chess ,Kukesh ,Oslo ,Tamil Nadu ,Wesley So ,Norway Chess Tournament ,
× RELATED ஐபிஎல் 2026 எலிமினேட்டர் சுற்று:...