×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்; இகா ஸ்வியடெக் மெகா வெற்றி

 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் 2வது சுற்றுப் போட்டியில் நேற்று, போலந்து வீராங்கனை இகா ஸ்வியடெக், சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக் அபார வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினர். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள், பாரிஸ் நகரில் நடந்து வருகின்றன. மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2வது சுற்றுப் போட்டியில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக், அமெரிக்க வீராங்கனை கேதரீன் மெக்நலி உடன் மோதினார்.

போட்டியின் துவக்கம் முதல் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய பெலிண்டா, முதல் செட்டை அநாயாசமாக 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர், 2வது செட்டில் ஒரு புள்ளி கூட விட்டுத்தராமல் 6-0 என்ற கணக்கில் வென்றார். இதன் மூலம் 2-0 என்ற நேர் செட்களில் வெற்றிவாகை சூடிய பெலிண்டா பென்சிக், 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் போலந்தை சேர்ந்த உலகின் 3ம் நிலை வீராங்கனை இகா ஸ்வியடெக், செக் குடியரசு வீராங்கனை சாரா பெஜ்லெக் களம் கண்டனர். இப்போட்டியின் துவக்கம் முதல் துடிப்புடன் ஆடி புள்ளிகளைக் குவித்த இகா ஸ்வியடெக், முதல் செட்டை, 6-2 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர் 2வது செட்டையும் 6-3 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றி அசத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய அவர் 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Tags : French Open Tennis ,Ika Swiatek ,Paris ,French Open Tennis Women's ,Belinda Bencic ,French Open ,Grand Slam ,
× RELATED ஐபிஎல் 2026 எலிமினேட்டர் சுற்று:...