சென்னை: தமிழக அரசியலில் அடுத்த திருப்பமாக அதிமுக-வை சேர்ந்த மூன்று எம்எல்ஏ-க்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து உள்ளனர். தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு அமைச்சர் ஆதவ் ஆர்ஜூனாவை பார்த்து தவெக-வில் ஐக்கியமாகி உள்ளனர்.சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்து தவெக-வில் இந்த மூவரும் இணைந்தனர்.
அதிமுக எம்.எல்.ஏ.க்களான மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகிய மூவரும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து தங்களின் ராஜினாமா கடிதத்தை அளித்தனர். இவர்கள் மூவரும் மதுராந்தகம், தாராபுரம் மற்றும் பெருந்துறை தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்களாக தேர்வாகி இருந்தனர். பிளவு அதிமுக பக்கம் அதாவது எஸ்.பி.வேலுமணி – சி.வி.சண்முகம் அணியில் இருந்த இந்த மூன்று எம்எல்ஏ-க்களும் சமீபத்தில் சட்டமன்றத்தில் நடைபெற்ற விஜய் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், தவெக-விற்கு ஆதரவாக வாக்களித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் பலம் 44-ஆக குறைந்துள்ளது. அதே நேரம் இந்த மூன்று எம்எல்ஏ-க்களின் செயலால் எஸ்.பி.வேலுமணி – சி.வி.சண்முகம் தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. தவிர முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார், இதனால் அத்தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. எனவே திருச்சி கிழக்கொடு சேர்த்து மதுராந்தகம், தாராபுரம் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கும் மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என தெரிகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் மூவரும் முறைப்படி ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர். இன்று மாலைக்குள் ஆய்வு செய்து ராஜினாமா ஏற்பு குறித்து அறிவிக்கப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியுள்ளார். இதனிடையே ராஜினாமா செய்தால் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்ற வாக்குறுதியை தொடர்ந்து இந்த மூவரும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த கையோடு, தவெக-வில் இணைந்து உள்ளனர்.
