விஷ்ணு புராணம் காட்டும் தத்துவங்களும் நீதிகளும்

பகுதி -3

இந்த உலகம் மட்டுமல்ல, பேரண்டம் எப்படிப் படைக்கப்பட்டது என்பதை விஞ்ஞானம் எப்படிச் சொல்லுகிறதோ, அதே அளவுக்கு அற்புதமாக விவரிக்கிறது விஷ்ணு புராணம். முதலில் பிரபஞ்சம் என்றால் என்ன என்று பார்ப்போம். பிரபஞ்சத்தின் தோற்றத்தை விஞ்ஞானம் இப்படி விவரிக்கிறது. பிரபஞ்சம் (Universe) என்பது காலம், வெளி, மற்றும் ஆற்றல், பருப்பொருள், கோள்கள், நட்சத்திரங்கள், விண்மீன் திரள்கள் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கிய பரந்த அமைப்பாகும். சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெருவெடிப்பு (Big Bang) மூலம் உருவான பிரபஞ்சம், தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இது கோடிக்கணக்கான விண்மீன் மண்டலங்களைக் கொண்டது.

இந்த விஞ்ஞான உண்மையில் இரண்டு விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்று பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே போகிறது. விரிவடைந்து கொண்டே போகிறது என்று சொன்னால் அது ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக சுருக்கிய நிலையில் இருந்தது என்று பொருள். சுருங்கிய ஒரு பொருள் தான் விரிவடைந்து கொண்டே செல்லும். வளர்வது விரிவடைகிறது என்று சொன்னால், இதற்கு முன்னால் இருந்த படிப்படியான நிலைகள் எல்லாம் அது ஏதோ ஒரு புள்ளியிலிருந்து தோன்றியது என்பதாக ஆகிவிடும். இதை மெய்ஞானம் சூட்சுமம் (Subtle) ஸ்தூலம் (Gross/ Physical/ Visible) என்று இரண்டு நிலைகளாகப் பிரிக்கிறது.

நம்மையே எடுத்துக்கொள்ளுங்கள் .ஐந்தரை அல்லது ஆறடி வளர்ந்து ஒரு பெரிய மனிதனாக(gross/physical) இருக்கிறோம். ஆனால் நாம் தோன்றியது ஒரு புள்ளியில்(subtle) இருந்து அல்லவா.

பனியில் ஓர் பாதி சிறு துளி மாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு
– என்று பட்டினத்தார் பாடுகின்றார்.

வெறும் 0.5 மி.மீ அளவுள்ள ஒரு ஒற்றை விந்தணு, கருக்குழாய்களில் ஒன்றில் உள்ள கருமுட்டையைக் கருவுறச் செய்வதற்கு, கருப்பை வாயின் அடிப்பகுதியிலிருந்து 152 மி.மீ-க்கும் மேலாக நீந்திச் செல்ல வேண்டும் என்கிறது அறிவியல். 0.5 மி.மீ தான் என்று ஐந்தரை உயரமும் 80 கிலோ எடையும் உள்ள சரீரத்தை உண்டாகியிருக்கிறது.சூட்சுமமாக ஒரு காலத்திலே நான் இருந்தது. அப்பொழுது இப்பொழுது இருக்கக்கூடிய தோற்றத்தில் இல்லை. ஆனால் இப்பொழுது தூலமான ஒரு தோற்றத்தைக் கொண்டிருக்கிறோம்.ஒரு விதை எப்படி மிகப்பெரிய ஆல விருட்சம் ஆகிறதோ, அப்படியே சூட்சும நிலையிலிருந்து தூல நிலைக்கு பிரபஞ்சம் மாறி இருக்கிறது.

இந்த இரண்டு நிலைகளுக்கும் சாட்சியாக பகவான் விளங்குகின்றான். வெளியே சென்ற காற்று உள்ளே வருவதும், உள்ளே இருந்த காற்று வெளியே செல்வதுமான இந்த விஷயங்களை சிருஷ்டி லயம் என்ற இரண்டு சொற்களால் சொல்லி, அவை இரண்டும் நடப்பதை சாட்சியாக பரமபுருஷன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்கிறது விஷ்ணுபுராணம். அந்த பரம புருஷன்தான் பரவாசுதேவன். இது அவருடைய ஒரு உருவம்.இதை இன்னொரு வகையாகவும் புரிந்து கொள்ளலாம்.

ஸ்தூலப் பிரபஞ்சம் (Gross Universe): நமது ஐந்து புலன்களால் (கண், காது, மூக்கு, நாக்கு, தோல்) உணரக்கூடிய பருப்பொருள் உலகம். மரம், செடி, மனிதர்கள், கோள்கள் என உருவமும் எடையும் கொண்ட அனைத்தும் இதில் அடங்கும். இது ‘‘பஞ்ச பூதங்களின்” (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) கலவையால் ஆனது.சூட்சுமப் பிரபஞ்சம் (Subtle Universe): இது கண்ணுக்குத் தெரியாத நுட்பமான உலகம். எண்ணங்கள், உணர்வுகள், அறிவு (Intellect), மற்றும் பிராண சக்தி ஆகியவை இதில் அடங்கும். ஸ்தூல உடல் மறைந்தாலும் (மரணம்), இந்த சூட்சும உடல் அழிவதில்லை; அது அடுத்த பிறவிக்கான விதையைத் சுமந்து செல்லும். இந்த இரண்டுக்கும் சாட்சி பகவான்.

இதற்கடுத்து மூன்று உருவங்கள் இருக்கின்றன. ஒன்று வ்யக்தம் என்று சொல்லப்படுகின்ற காரியம். இன்னொன்று அவ்யக்தம் என்று சொல்லப்படுகின்ற காரணம். அவ்யக்தம் மற்றும் வ்யக்தம் என்ற சொற்கள் வேதாந்தத்தில் முக்கியமானது. ஒரு பொருளின் ‘இருப்பு’ நிலையை குறிக்கிறது.

1. அவ்யக்தம் (Unmanifested):

இது விதை போ ன்ற நிலை. ஒரு பெரிய ஆலமரம் ஒரு சிறிய விதைக்குள் அடங்கியிருப்பதைப் போல, பிரபஞ்சம் உருவாவதற்கு முன்பு ஒடுங்கி இருக்கும் நிலை ‘‘அவ்யக்தம்”. இங்கு குணங்கள் சமநிலையில் இருக்கும், வெளிப்படையான செயல்பாடுகள் ஏதும் இருக்காது.

2. வ்யக்தம் (Manifested):

விதை முளைத்து மரமாவது போல, ஒடுங்கியிருந்த ஆற்றல் உருவம் பெற்று வெளிப்படுவதே ‘‘வ்யக்தம்”. நாம் பார்க்கும் இந்த விரிந்த பிரபஞ்சம் வ்யக்த நிலை ஆகும்.இது தவிர நான்காம் நிலை காலம். தத்துவ ரீதியாக காலம் என்பது மாற்றங்களின் அளவீடு. ஒரு பொருள் ஒரு நிலையிலிருந்து (அவ்யக்தம்) இன்னொரு நிலைக்கு (வ்யக்தம்) மாறுவதையே காலம் என்கிறோம்.

இந்திய தத்துவத்தில், காலம் என்பது ஒரு நேர்க்கோடல்ல; அது ஒரு சுழற்சி (சக்கரம்). படைப்பு (சிருஷ்டி), காப்பு (ஸ்திதி), அழிவு (சம்ஹாரம்) எனத் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கும்.

இனியறிந்தேன் எம்பெருமான்! என்னை-
இனியறிந்தேன் காரணன் நீ, கற்றவை நீ,
கற்பவை நீ நற்கிரிசை நாரணன்நீ
நன்கறிந்தேன் நான்! (நான்முகன்
திருவந்தாதி-96)

இங்கு ‘இனி அறிந்தேன்’ என்று மூன்று முறை வருவது, ஆழ்வாரின் அசைக்க முடியாத நம்பிக்கையைக் காட்டுகிறது).

‘‘காரணன் நீ…” இந்தப் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னால் இருந்த ‘அவ்யக்த’ நிலையில், அதற்கு மூலமான காரணமாக (Cause) நீயே இருக்கிறாய்.

‘‘கற்றவை நீ, கற்பவை நீ…”
கற்றவை: ஏற்கனவே வெளிப்பட்ட (வ்யக்தமான), நாம் கற்றுணர்ந்த அறிவு மற்றும் ஸ்தூலமான விஷயங்கள் அனைத்தும் நீயே.

கற்பவை: இனிமேல் உருவாகப் போகிற, நாம் இனிமேல் அறியப்போகும் சூட்சுமமான உண்மைகளும் நீயே.

‘‘நல்கிரிசை நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான்”

‘‘நல்ல செயல்களின் பயனாக விளங்குபவனும், நாராயணனாகிய நீயே என்பதை நான் நன்றாக அறிந்து கொண்டேன்.”

‘கற்றவை’ (இறந்தகாலம்/நிகழ்காலம்) மற்றும் ‘கற்பவை’ (வருங்காலம்) எனப் பிரித்துக் கூறுவதன் மூலம், காலம் கடந்தும், காலத்திற்கு உட்பட்டும் இருக்கும் இறைவனின் தன்மையை ஆழ்வார் சுட்டிக் காட்டுகிறார்.

இந்த நிலைகளின் மூலமாக, பிரபஞ்சத்தை சிருஷ்டிகின்றான்., காப்பாற்றுகின்றான். ஒடுக்குகின்றான். மறுபடியும் அதை சிருஷ்டிக்கின் றான். இதை அவன் ஒரு விளையாட்டாகச் செய்கின்றான்..இதை கம்பரின் ‘‘உலகம் யாவையும் தாமுளவாக்கலும்” என்கிற பாடல் அதி அற்புதமாக விவரிக்கிறது.

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.”

1. அவ்யக்தம் வ்யக்தம் (தாமுளவாக்கல்)

‘‘தாமுளவாக்கல்” என்றால் இல்லாத ஒன்றை உருவாக்குவது என்று பொருளல்ல. தத்துவ ரீதியாக, அவ்யக்த (வெளிப்படாத) நிலையில் தன்னுள் ஒடுங்கிக் கிடக்கும் உலகத்தை, வ்யக்த (வெளிப்பட்ட) நிலைக்குக் கொண்டு வருவது. ஒரு சிற்பி கல்லுக்குள் இருக்கும் சிலையை வெளிப்படுத்துவது போல, இறைவன் தன்னுள் சூட்சுமமாக இருந்த பிரபஞ்சத்தைப் பருப்பொருளாக (ஸ்தூலமாக) விரிக்கிறான்.

2. ஸ்தூலப் பிரபஞ்சம் (நிலை பெறுத்தல்)

வெளிப்பட்ட உலகம் அழியாமல் இயங்குவதை ‘‘நிலைபெறுத்தல்” என்கிறார் கம்பர். நாம் பார்க்கும் மலைகள், ஆறுகள், கோள்கள் என அனைத்தும் ஸ்தூல வடிவில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை நிலைத்திருக்க இறைவன் ஆதாரமாக இருக்கிறான்.

3. ஸ்தூலம் சூட்சுமம் (நீக்கல்)

‘‘நீக்கல்” என்பது அழிவு அல்ல, அது மீண்டும் ஒடுங்குதல். ஸ்தூலமாகத் தெரிந்தஉலகம் மீண்டும் அதன் காரணமான சூட்சும நிலைக்கு (அவ்யக்தத்திற்கு) திரும்புவதைக் குறிக்கிறது.

4. காலம் (அலகிலா விளையாட்டு)

இறைவன் இந்த ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறான். இதற்கு முடிவே இல்லை என்பதால் இதை ‘‘அலகிலா விளையாட்டு\” என்கிறார். காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருப்பதை இது உணர்த்துகிறது.

திருமழிசை ஆழ்வார்: ‘‘காரணன் நீ” (விதை நீ) என்றார்.கம்பர்: ‘‘தாமுளவாக்கலும்” (விதையை மரமாக்குபவன்) என்கிறார்.இருவருமே சொல்லும் செய்தி ஒன்றுதான்: இந்தப் பிரபஞ்சம் என்பது இறைவனின் ஒரு சிறு பகுதி அல்லது அவனது ஆற்றலின் வெளிப்பாடு என்பதையே இருவரும் அழகாக விவரிக்கிறார்கள்.விஷ்ணு புராணத்தில் விவரிக்கப்படும் சாங்கிய தத்துவம் (Sankhya Philosophy), பிரபஞ்சத்தின் படைப்பை ஒரு விஞ்ஞான ரீதியான படிநிலையாக விளக்குகிறது.

‘‘சாங்கியம்” என்ற சொல்லுக்கு ‘எண்ணிக்கை’ அல்லது ‘பகுத்தாராய்தல்’ என்று பொருள். விஷ்ணு புராணத்தில் கபில முனிவரால் உபதேசிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. சாங்கியம் பிரபஞ்சத்தை இரண்டு பிரதான தத்துவங்களுக்குள் அடக்குகிறது:

1.புருஷன் (Purusha): இது தூய அறிவு அல்லது ஆன்மா. இது எதையும் செய்வதில்லை, வெறும் சாட்சியாக (Observer) மட்டுமே இருக்கிறது. இது மாற்றமற்றது.
2.பிரகிருதி (Prakriti): இதுவே ‘அவ்யக்தம்’. மூலப்பொருள் (Primal Matter). பிரபஞ்சத்தின் அனைத்து ஸ்தூல மற்றும் சூட்சும மாற்றங்களுக்கும் இதுவே காரணம்.

படைப்பின் படிநிலை (Process of Manifestation)பிரகிருதிக்குள் மூன்று குணங்கள் (சத்வம், ரஜஸ், தமஸ்) சமநிலையில் இருக்கும் வரை உலகம் தோன்றுவதில்லை. எப்போது புருஷனின் முன்னிலையில் இந்தச் சமநிலை குலைகிறதோ, அப்போது படைப்பு தொடங்குகிறது.பிரகிருதியிலிருந்து முதலில் மஹத் தோன்றும் அகங்காரம் (எனும்) உணர்விலிருந்தே பிரபஞ்சம் கிளைக்கத் தொடங்குகிறது. பின் சூட்சும நிலையான தன்மாத்திரைகள் வரும்.பால் தயிர் ஆவதற்கு முன்னால் பாலாகவும் இல்லாமல் தயிராகவும் மாறாமல் உள்ள நிலை தன்மாத்திரைகள் எனப்படும்.. சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் போன்ற புலன்களுக்கு முந்தைய நுட்பமான நிலைகள் தன்மாத்திரைகள்.

அடுத்து வருவது பஞ்ச பூதங்கள்: எனும் ஸ்தூல நிலை. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என நாம் பார்க்கும் உலகம் உருவாகிறது.சாதாரண சாங்கிய தத்துவம் (Atheistic Sankhya) இறைவனைப் பற்றிப் பேசாது. ஆனால் விஷ்ணு புராணம் கூறும் சாங்கியம் ஒரு முக்கியமான மாற்றத்தைச் செய்கிறது. புருஷனுக்கும் பிரகிருதிக்கும் மேலாக, இவை இரண்டையும் இயக்கும் பரம்பொருளாக ‘விஷ்ணு’வை வைக்கிறது. அவ்யக்த நிலையில் இருக்கும் பிரகிருதியை வ்யக்தமாக (உலகமாக) மாற்றுவது விஷ்ணுவின் சங்கல்பமே என்கிறது.

பிரம்மாண்டம் எப்படித் தோன்றியது என்பதை அதி அற்புதமாக விவரிக்கிறது விஷ்ணு புராணம். விஷ்ணு புராணத்தைப் படிக்கும் பொழுது விஞ்ஞானத்தையும் மெய் ஞானத்தையும் இணைத்துப் பார்க்கும் சக்தியைப் பெறுவார்கள்.

முனைவர் ஸ்ரீராம்

 

Related Stories: