×

அதிமுகவில் வேலுமணி அணிக்கு அமைச்சர் பதவி தர ஆளுநர் மறுப்பு: பதவி வெறியில் விஜய்யை ஆதரித்த 25 எம்எல்ஏக்கள் அதிர்ச்சி

 

* விசிக, முஸ்லிம் லீக்கட்சிகளுக்கு தவெக அழைப்பு
* புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

சென்னை: கட்சித் தாவல் புகார் எதிரொலியாக எஸ்.பி.வேலுமணி அணிக்கு அமைச்சர் பதவி வழங்க ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் மற்றும் தவெகவினர் இன்று நடைபெறும் அமைச்சரவை விரிவாக்கத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் மைனாரிட்டி அரசு பதவி ஏற்றுள்ளது. தற்போது விஜய்யுடன் சேர்த்து 10 பேர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் சேர விருப்பம் தெரிவித்துள்ளது. மேலும், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

அவர்களில் 12 பேர் அமைச்சர் பதவி எதிர்பார்த்தனர். ஆனால், 7 பேருக்கு அமைச்சர் பதவி தர விஜய் சம்மதித்திருந்தார். ஆனால் அவர்கள் 25 பேரையும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் பதவியை பறிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியினர், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், ஆளுநர் அர்லேகரிடம் மனு அளித்துள்ளனர். இந்த மனு மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்தநிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் கேரளாவில் இருந்து நேற்று இரவு சென்னை வந்தார். இதையடுத்து, தமிழக அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார்.

இன்று காலை புதிதாக அமைச்சர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது. தற்போது விஜய் உள்ளிட்ட 10 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இன்னும் 24 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கலாம் என்றாலும், அமைச்சரவை விரிவாக்கத்தின்போது 20 பேருக்கு அமைச்சர் பதவி வழங்க வாய்ப்புள்ளது. காரணம், தவெகவுக்கு ஆதரவு கொடுத்துள்ள அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு அணியினர் 25 பேரில் 7 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதிமுக கொறடா உத்தரவை மீறி 25 அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அவர்களின் எம்எல்ஏ பதவியை பறிக்க எடப்பாடி அணியினர் திட்டமிட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ஒரு நல்ல பதிலை தெரிவிக்காவிட்டால், நீதிமன்றம் செல்ல எடப்பாடி அணியினர் திட்டமிட்டுள்ளனர். ஆளுநர் அர்லேகரிடம் எடப்பாடி அணியினர் புகார் தெரிவித்துள்ளதால், வேலுமணி தரப்பு எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், இன்றைய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது தவெக மற்றும் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்ஏல் கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் மட்டுமே இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் அணியினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் விஜய் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதால், அவர்களும் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பில்லை.

ஆளுநர் மறுத்துவிட்டதால், அமைச்சர் கனவுடன் இருந்த இருந்த வேலுமணி ஆதரவாளர்கள் தற்போது அதிருப்தி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே கட்சியில் இருந்த மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு விட்டது. தற்போது எம்எல்ஏ பதவியும் பறிபோனால், கடந்த ஆட்சியில் அமமுகவில் சேர்ந்த 18 பேரின் நிலைதான் நமக்கும் ஏற்படும் என்று வேலுமணி அணியினர் அச்சம் அடைந்துள்ளனர். அதில் ஒரு சில எம்எல்ஏக்கள் மீண்டும் எடப்பாடி அணிக்கு தாவ தூதுவிட்டு வருகின்றனர். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக 25 எம்எல்ஏக்களின் நிலை உள்ளதாக அவர்கள் வருத்தப்படுகின்றனர்.

இதனால், காங்கிரசில் ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), விஸ்வநாதன் (மேலூர்) மற்றும் விசிகவின் வன்னியரசு (திண்டிவனம்), தவெகவைச் சேர்ந்த தாம்பரம் சரத்குமார், ஈரோடு கிழக்கு பாலாஜி, சேலம் பார்த்திபன், கோவை வடக்கு சம்பத்குமார் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இன்று 18 முதல் 23 பேர் வரை அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திருமாவளவனை பதவி ஏற்க வரும்படி விஜய் அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆதவ் மூலம் 2 அமைச்சர் பதவி வழங்கினாலும், தானும், வன்னியரசுவும் பதவி ஏற்கத் தயார் என்று கூறியதாக கூறப்படுகிறது.

ஆனால் நேற்று இரவு வரை இருவருக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. தற்போது உயர்கல்வி, சுற்றுலா, வணிக வரித்துறை, பால்வளம், இந்து அறநிலையத்துறை, தொழிலாளர் நலன், சிறு தொழில், சிறுபான்மையினர் நலம், கைத்தறி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகிய துறைகள் மட்டுமே உள்ளன. அதில் காங்கிரஸ் ராஜேஷ்குமாருக்கு சுற்றுலாவும், விஸ்வநாதனுக்கு உயர் கல்வி, வன்னியரசுவுக்கு ஆதி திராவிடர் நலத்துறை, ஐயுஎம்எல் உறுப்பினருக்கு சிறுபான்மையினர் நலன் ஆகிய துறைகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலுமணிக்காக நகராட்சி நிர்வாகத்துறையை தன்னிடமே விஜய் வைத்திருந்தார்.

தற்போது அந்த துறையை மாற்றிவிடலாமா என்று ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், சென்னையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நிருபர்களிடம் கூறியதாவது: அமைச்சரவை விரிவாக்கம் கூடிய விரைவில் அறிவிக்கப்படும். காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் என எல்லோரும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தை தெரிவித்திருக்கிறோம். உடனடியாக கலந்தாலோசித்து முடிவு சொல்வதாக சொல்லி இருக்கிறார்கள். நல்ல செய்தி வரும் என நினைக்கிறோம். அன்பான குடும்பம்போல அமைச்சரவை இருக்க வேண்டும் என முதல்வர் விஜய் விரும்புகிறார். வெளியில் இருந்து ஆதரவு கொடுத்துள்ள இடதுசாரிகளின் கொள்கை முடிவுகளை நாங்கள் மதிப்போம். சமூகநீதி அடிப்படையில் இயங்கும் தலைவர்கள், கட்சிகள் அமைச்சரவையில் இணைய வேண்டும்.

மக்களின் தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்பட நினைத்ததால் அதிமுகவின் ஒரு தரப்பினர் எங்களுக்கு ஆதரவு தந்தனர். எம்எல்ஏக்கள் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது அவர்கள் உரிமை; அவர்களை சி.வி.சண்முகம் வழிநடத்துவார். சட்ட சிக்கல் வந்தால் சி.வி.சண்முகம் சந்திப்பார். அதிமுக நன்றாக இருக்க வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள். எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய அதிமுகவை நாங்கள் தோழமையுடன் தான் பார்க்கிறோம். தேர்தலில் தோல்வியை தழுவிய பிறகு நல்ல எதிர்க்கட்சியாக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டிருக்க வேண்டும். பின்வாசல் வழியாக ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிசாமி நினைத்தார்.

பாஜவுடன் அதிமுக சேர்ந்தது மிகப்பெரிய அதிருப்தி என அதிமுக தொண்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக முதல்வர் விஜய் அறிவிப்பு வெளியிடுவார். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து அமைச்சரவையில் சி.வி.சண்முகம் அணி இடம்பெறுமா என்ற கேள்விக்கு ‘யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது. அமைச்சர் பதவிக்காக அவர்கள் எங்களிடம் வரவில்லை’ என கூறினார்.

காங்கிரசுக்கு 2 அமைச்சர்: முதல்வர் போனில் வாழ்த்து
தவெக தலைவர் விஜய் நேற்று காங்கிரஸ் மேலூர் தொகுதி எம்எல்ஏ பி.விஸ்வநாதனிடம் தொலைபேசியில் பேசி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார். அப்போது, ‘‘தங்களின் பிறந்த நாள் பரிசாக நாளை (இன்று) காலை எனது அமைச்சரவையில் இடம் பெறப்போகிறீர்கள். வாழ்த்துகள்’’ என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார். அதேபோன்று கிள்ளியூர் காங்கிரஸ் எம்எல்ஏவும் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான ராஜேஷ்குமாருக்கும் முதல்வர் விஜய் நேற்று தொலைபேசியில் பேசி, இன்று அமைச்சரவையில் இடம்பெற இருப்பதற்கு வாழ்த்து தெரிவித்தாக அவர் கூறினார்.

Tags : Governor ,Velumani ,Atamugail ,Vizika ,Muslim ,Chennai ,S. B. ,Congress ,Vicica ,IUML ,
× RELATED தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று...