மயிலாடுதுறை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிப்பதாக புகார்கள் வந்ததையடுத்து தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் சென்று விசாரித்தனர். பல இடங்களில் கூடுதலாக வசூலிக்கும் 10 ரூபாயில் தங்களுக்கு மாமூல் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கூடுதல் வசூலில் தவெகவினர் கண்டிப்பாக தங்களுக்கு மாமூல் வழங்க வேண்டும் உத்தரவு போட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், சீர்காழியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக தவெக நிர்வாகி பொய் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அந்த புகாரின்பேரில் கடை மேற்பார்வையாளர், விற்பனையாளர் மீது சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தவெகவினரின் மிரட்டலை கண்டித்தும், வழக்கை வாபஸ் பெறக்கோரியும் மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களின் இந்த திடீர் போராட்டம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 42 மதுபான கடைகளும் திறக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து டாஸ்மாக் ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை மகலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துசாமியிடம் மனு அளித்தனர்.
இது குறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில், ‘‘ஒரு நாளைக்கு ரூ.8 லட்சத்துக்கு விற்பனை நடைபெறும். அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதலாக 10 ஊழியர்கள் தற்காலிகமாக தங்களால் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கடையின் கூடுதல் வாடகை மற்றும் மின் கட்டணம், லாரிகளில் சரக்கு ஏற்றி வரும்போது அளிக்கப்படும் மாமூல் ஆகியவற்றை நாங்கள் தான் கொடுக்க வேண்டியுள்ளது. அரசே இந்த செலவுகளை ஏற்க வேண்டும்.
2 ஊழியர்களை மட்டும் வைத்து கடை நடத்தினால் கூட்டம் அதிகரித்து சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். எங்களை மிரட்டுபவர்களிடம் இருந்து போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். 2 ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்க மாட்டோம்’’ என்றனர்.
