×

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து கடும் சரிவு: பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள்

கூடலூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து கடுமையாக சரிந்துள்ளது. இதனால், பாசன விவசாயிகள் பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். முல்லைப்பெரியாறு அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறுகின்றன. 152 அடி உயரமுள்ள இந்த அணையில், 2014ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், தற்காலிகமாக 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டு தொடக்கம் முதலே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது. ஒரு சில நாட்களில் முற்றிலும் நின்று போனது. இதனால், அணையின் நீர்மட்டம் 140 அடியில் இருந்து 110.10 அடியாக குறைந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கடந்த 9ம் தேதி அணையின் நீர்வரத்து வினாடிக்கு 1,580 கன அடியாக உயர்ந்தது. நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்தது. இந்நிலையில், ஒருவாரமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லை.

இதனால், நீர்வரத்து கடுமையாக சரிந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்வரத்து வினாடிக்கு 13.66 கனஅடி. அணையின் நீர்மட்டம் 111.50 அடி. மொத்த நீர் இருப்பு 1150.50 மில்லியன் கன அடி. மேலும், அணையில் இருந்து தமிழகத்திற்கு இரைச்சல் பாலம் வழியாக வினாடிக்கு 200 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. வரும் நாட்களில் தென்மேற்கு பருவ மழை பெய்தால் மட்டுமே அணையின் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Tags : Periyar Dam ,Gudalur ,Mullaperiyar Dam ,Theni ,Dindigul ,Madurai ,Sivaganga ,Ramanathapuram ,
× RELATED தஞ்சையில் சிலிண்டர் வெடித்து...