×

பஸ் நிலைய பகுதிகளில் மூடல் எதிரொலி; டாஸ்மாக் கடைகளை தேடி அலையும் மது பிரியர்கள்: திறந்திருக்கும் கடைகளில் கூட்டம் அதிகரிப்பு

நாகர்கோவில்: குமரியில் பஸ் நிலைய பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடலால், வெளியூர்களில் இருந்து வருபவர்கள் மதுக்கடைகளை தேடி அலைந்து வருகிறார்கள். நகர்ப்புற பகுதிகளில் திறந்திருக்கும் கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய், முதற்கட்டமாக 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார். குறிப்பாக வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

அதன்படி குமரி மாவட்டத்தில், 18 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. நாகர்கோவில் மாநகரில் 9 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக வடசேரி பஸ் நிலையம் அருகில் செயல்பட்ட 2 டாஸ்மாக் கடைகள், கிருஷ்ணன்கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்த ஒரு டாஸ்மாக் கடை, மீனாட்சிபுரம் அண்ணா பஸ் நிலையம் அருகில் இருந்த 2 டாஸ்மாக் கடைகள், ஒழுகினசேரி அவ்வை சண்முகம் சாலையில் இருந்த 2 டாஸ்மாக் கடைகள், ஆயுதப்படை ரோட்டில் இருந்த ஒரு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. பஸ் நிலையங்களை சுற்றி இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், மது பிரியர்கள் மது வகைகள் வாங்க திண்டாடி வருகிறார்கள்.

வடசேரி பஸ் நிலையம், கிருஷ்ணன்கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்த 3 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டதால், வடசேரி பஸ் நிலையம் பின்புறம் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த சில நாட்களாக மது பிரியர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த பாதிக்கப்பட்ட மக்கள், இந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரியும் போராட்டம் நடத்தினர். இதனால் நேற்று இந்த டாஸ்மாக் கடையும் மூடப்பட்டது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை குறைந்ததால், தற்போது திறந்து செயல்படும் டாஸ்மாக் கடைகளில் மது வகைகள் வாங்க மது பிரியர்கள் முண்டியடித்து வருகிறார்கள்.

நாகர்கோவில் ஒழுகினசேரி அவ்வை சண்முகம் சாலையில், தீயணைப்பு துறை அலுவலகம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வகைகள் வாங்க நேற்று மதியத்தில் இருந்து மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வரிசையில் நின்று மது வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இரவிலும் மது பிரியர்கள் முண்டியடித்து மது வகைகளை வாங்கி சென்றனர். இந்த நிலையில், பல டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் எலைட் பாரில் கூட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் விலையும் உயர்ந்துள்ளது. மேலும் ஓட்டல்களில் செயல்படும் பார்களிலும் மது பிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.

இதற்கிடையே குமரி மாவட்டத்தில் திருட்டு மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. ஸ்டாலின் எச்சரித்துள்ளார். சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசார், மதுவிலக்கு பிரிவு போலீசார் இதை கண்காணிக்க வேண்டும் என எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருட்டு மது விற்பவர்களை போலீசார் கைது செய்து உடனடியாக ஜாமீனில் விட்டு விடுகின்றனர். இதுவும் திருட்டு மது விற்பனை செய்பவர்களுக்கு சாதகமாக உள்ளது. வீடுகள், கடைகள், குடோன்களில் பதுக்கி ரகசியமாக விற்பனை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். தற்போது தமிழ்நாடு அரசின் உத்தரவின் படி திருட்டு மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. ஸ்டாலின் எச்சரித்துள்ளார். அதிக வழக்குகள் இருந்தால், அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் போலீசார் கூறி உள்ளனர்.

Tags : TASMAC ,Nagercoil ,Kumari ,Vijay ,Chief Minister ,Tamil ,Nadu ,
× RELATED அம்மா உணவகங்களை புதுப்பிக்க தமிழக அரசு உத்தரவு