×

காலண்டர், டைரிகள் பயன்பாடு குறைவு: விலை வீழ்ச்சியால் அட்டை உற்பத்தி பாதிப்பு

திருப்பூர்: காலண்டர், டைரிகள் பயன்பாடு குறைந்து டிஜிட்டல் மயமாக்கல் அதிகரித்து இருப்பதால், அட்டை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் அட்டை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த மடத்துக்குளம், போளரப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காகித அட்டை தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த அட்டைகள் காலண்டர்கள், டைரிகள், பட்டாசு பெட்டிகள் மற்றும் புத்தகங்களின் அட்டை தயாரிப்புக்கு பயன்படுகிறது. இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் 2 வகையான அட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. சாதாரண கழிவு காகிதக்கூழ் கொண்டு ‘மில் போர்டு’ என்ற சாதாரண அட்டை தயாரிக்கப்படுகிறது. மேலும் தரமான காகித கழிவுகள் மற்றும் பலம் கூட்டும் ரசாயனங்களை சேர்த்து, நவீன தொழில்நுட்ப முறையில் தரமான அட்டைகள் (குவாலிட்டி போர்டு) தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மில் போர்டுகள் தீப்பெட்டி மற்றும் சாதாரண பட்டாசு பெட்டிகள் தயாரிக்க சிவகாசிக்கு அனுப்பப்படுகிறது.

தரமான அட்டைகள் முன்னணி நிறுவனங்களின் ஆடம்பர காலண்டர்கள், டைரிகள், கோப்புகள் மற்றும் துணிப் பெட்டிகள் தயாரிக்க சென்னை, கோவை போன்ற பெருநகரங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள சந்தை மந்தநிலை காரணமாக, அட்டைகளின் விலையும் வரலாறு காணாத அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, சந்தையில் சாதாரண ரக மில் போர்டு ஒரு டன் ரூ.8 ஆயிரத்துக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.இதேபோல் அதிக தரம் கொண்ட குவாலிட்டி போர்டு ஒரு டன் ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. சாதாரணமாக ஒரு டன் அட்டை தயாரிப்பதற்கு தொழிலாளர்களுக்கு கூலி மட்டுமே ரூ.4 ஆயிரம் வரை கொடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இந்த விலை வீழ்ச்சி குறித்து அட்டை உற்பத்தியாளர்கள் கூறுகையில், ‘‘பழைய காகிதங்கள் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு மற்றும் இதர ஆலை பராமரிப்பு செலவு என அனைத்தும் உயர்ந்து விட்டது. ஆனால் அட்டை தயாரிப்பதற்கான அடக்க செலவே சந்தை விற்பனை விலையை விட பல மடங்கு அதிகமாக உள்ளது.டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக காலண்டர்கள், டைரிகளின் பயன்பாடு குறைந்து வருவதும், பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பும் இந்த தொழிலை பதம் பார்த்துள்ளன. இந்த சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் இடைத்தரகர்கள், அட்டைகளை மிக குறைந்த விலைக்குக் கேட்கின்றனர். வாங்கிய கடனுக்கான வட்டியை கூட கட்ட முடியாமல் பல ஆலைகள் மூடப்பட்டு வருகின்றன. ஆயிரக்க ணக்கான தொழிலாளர்களுக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் வேலைவாய்ப்பு வழங்கும் இந்த தொழில் நலிவடைந்து வருகிறது. இந்த தொழிலை காப்பாற்ற அரசு உடனடியாக தலையிட வேண்டும். மூலப்பொருட்கள் தடையின்றி கிடைக்க மறுசுழற்சி மையங்களை முறைப்படுத்த வேண்டும்’’ என்றனர்.

Tags : Tiruppur ,Tiruppur district ,Udumalai ,Madathukulam ,Polarapatti ,
× RELATED தஞ்சையில் சிலிண்டர் வெடித்து...