சென்னை: சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட திமுக கள ஆய்வு குழு இன்று முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. கட்சியினரை தனித்தனியாக சந்தித்து தேர்தல் முடிவு தொடர்பாக கருத்துக்களை கேட்கின்றனர். தமிழக சட்டசபை தேர்தல் தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது. இக்குழுவினருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர், தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை. நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது. திமுகவினரை மனதுவிட்டுப் பேச அனுமதியுங்கள். அவர்களின் குறைகளை, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை அவர்கள் கொட்டித் தீர்க்கட்டும். தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள்.
நிர்வாகிகளின் உணர்வு என்ன? அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அது மட்டும்தான் எனக்குத் தேவை” என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆய்வு குழு இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. சென்னையை பொறுத்தவரைதிருவொற்றியூர், மாதவரம், ஆர்.கே. நகர், பெரம்பூர், ராயபுரம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆவடி, பூந்தமல்லி, திருத்தணி, திருவள்ளூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு எம்.எம்.அப்துல்லா,
ரேகா பிரியதர்ஷினி ஆய்வு செய்கின்றனர். எழும்பூர், கொளத்தூர், அம்பத்தூர், துறைமுகம், திரு.வி.க.நகர், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், மதுரவாயல், விருகம்பாக்கம், வேளச்சேரி, அண்ணாநகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிகளுக்கு எஸ்.கே.பி. கருணா, கே.ஈ.பிரகாஷ் எம்.பி. செல்கின்றனர். உத்திரமேரூர், காஞ்சிபுரம், செய்யூர், மதுராந்தகம், ஆலந்தூர், செங்கல்பட்டு,
தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், திருப்போரூர், பல்லாவரம், தியாகராய நகர், மயிலாப்பூர் தொகுதிகளுக்கு ஹெலன் டேவிட்சன், கே.இளமகிழன் கள ஆய்வு நடத்த உள்ளனர். இதேபோல் தமிழ்நாடு முழுவதும் குழு சென்று இன்று ஆய்வு மேற்கொள்கிறது. இந்த குழு மாவட்ட செயலாளர், தொகுதி பார்வையாளர், வேட்பாளர்கள், தொகுதிக்கு உட்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை தனித்தனியாக சந்தித்து பேச உள்ளனர். அதோடு மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்களையும் தனித்தனியே சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்க உள்ளனர்.
இச்சந்திப்பின்போது மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், வேட்பாளர்கள் உள்ளிட்டவர்கள் உடன் இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கள ஆய்வு செய்யும் குழு ஜூன் 5ம் தேதிக்குள் அறிக்கையை சமர்ப்ப்பிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கள ஆய்வு குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் திமுகவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
