சென்னை: ‘தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளான திமுக – அதிகமுவை இணைக்க நான் முயற்சிக்கவில்லை’ என்றும், ‘விஜய் சி.எம் ஆனதால் எனக்கு பொறாமை ஏற்பட்டது என்று சொல்வதும் உண்மை இல்லை’ என்றும், நேற்று காலை போயஸ் கார்டனிலுள்ள தனது வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் அளித்த பரபரப்பு பேட்டி வருமாறு: தேர்தல் முடிவுகளுக்கு பிறகு என்னை பற்றி சில கடுமையான விமர்சனங்கள் பரவி வருகிறது. அதற்கு நான் பதில் அளிக்கவில்லை என்றால், அந்த பொய்கள் அனைத்தும் உண்மையாகி விடும்.
நான் பெங்களூருவுக்கு சென்றபோதும், கேரளாவுக்கு ஷூட்டிங்கிற்கு சென்றபோதும், விமான நிலையத்தில் அதற்கு பதில் அளிக்கலாம் என்று நினைத்தேன். அதை மேலும் தாமதப்படுத்த கூடாது என்றுதான் இப்போது பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாரை சந்தித்தேன். அதற்கு பல விமர்சனங்கள் எழுந்தன. மு.க.ஸ்டாலினும், நானும் 40 ஆண்டு கால நண்பர்கள். நட்பு என்பது அரசியல் மற்றும் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டது.
ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். ஆனால், மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் தோற்றது எனக்கு அதிக வருத்தத்தை ஏற்படுத்தியது. அதன் காரணமாகவே ஒரு நண்பன் என்ற முறையில் அவரை நேரில் சந்தித்தேன். அதற்கு, விஜய் முதல்வராக கூடாது என்று நான் நினைப்பதாகவும், 2 பெரிய கட்சிகளை (திமுக – அதிமுக) ஒன்று சேர்ப்பதற்காக பேசி வருவதாகவும் செய்திகள் பரவியது. இதுபோன்ற சூழ்நிலையில் இப்படி எல்லாம் பேச முடியுமா? அப்படி பேசும் அளவுக்கு தரம்கெட்ட ஆள் நான் கிடையாது. அதை இப்போது தெளிவுபடுத்தி விடுகிறேன்.
இரண்டாவதாக, விஜய் முதல்வர் ஆனதற்கு நான் வாழ்த்து சொல்லவில்லை என்று விமர்சிக்கிறார்கள். அவர் முதல்வராக பதவியேற்றதும், அவரை வாழ்த்தி எக்ஸ் தளத்தில் நான் பதிவிட்டேன். 2016ம் ஆண்டு நான் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு, விமான நிலையம் செல்வதற்கு முன்பு, அங்கு பத்திரிகையாளர்கள் யாராவது இருக்கிறார்களா என்பதை கேட்டு தெரிந்துகொண்டு செல்வேன். அன்று அப்படி கேட்டபோது, யாரும் இல்லை என்று சொன்னார்கள்.
ஆனால், நான் விமான நிலையம் சென்ற பிறகு திடீரென்று ஒரு நபர், கையில் மொபைல் போனுடன் வந்து என்னிடம், ‘விஜய் முதல்வராகி விட்டார்’ என்று ஒரு கேள்வியை எழுப்பினார். நான் அதிர்ச்சியாகி விட்டேன். அந்த நபர் மீடியா இல்லை. அதனால், பதில் சொல்லாமல் சிரித்தபடி சென்றுவிட்டேன். அதற்காக விஜய்க்கு நான் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றும், அவர் மீது எனக்கு பொறாமை என்றும் விமர்சனம் செய்கிறார்கள். நான் அரசியலிலேயே இல்லை.
பிறகு ஏன் நான் அவர் மீது பொறாமைப்பட வேண்டும்? ஒருவேளை, எனது நண்பர் கமல்ஹாசன் முதல்வராகி இருந்தால் எனக்கு பொறாமை வந்திருக்கலாம். ஆனால், அப்போதும் எனக்கு பொறாமை வந்திருக்காது. கிடைப்பது கிடைக்காமல் இருக்காது. கிடைக்காமல் இருப்பது கிடைக்காது. எனக்கும், விஜய்க்கும் இடையே ஒரு தலைமுறை இடைவெளி இருக்கிறது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் இடைவெளி இருக்கிறது. நான் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கிறேன், என்னுடன் விஜய்யை ஒப்பிடுவது சரியாக இருக்காது என்று.
அதுபோல், அவருடன் என்னை ஒப்பிடுவதும் சரியாக இருக்காது. அவரது சிறுவயதில் இருந்து நான் பார்த்து வருகிறேன். அவர் முதல்வர் ஆவதில் எனக்கு என்ன பொறாமை? அரசியலில் சிறிய வயதில், அதாவது, 51 வயதில் எம்.ஜி.ஆர் மற்றும் என்டிஆர் போல் விஜய் சாதனை படைத்திருக்கிறார். சினிமாவில் இருந்து வந்த ஒரு நபர் அரசியலில் வெற்றிபெற்று இருக்கிறார். இதில் எனக்கு என்ன பொறாமை இருக்க போகிறது? இது சந்தோஷம் கலந்த ஆச்சரியம்தான். எனவே, எனக்கு எந்த பொறாமையும் இல்லை.
நிறைய எதிர்பார்ப்புகள்தான் இருக்கிறது அந்த எதிர்பார்ப்புகளை அவர் பூர்த்தி செய்து, மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று ஏற்கனவே ஒரு தெளிவான அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தி இருக்கிறேன். அது தெரிந்த பிறகும் நான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று பேசுபவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. சினிமா வேறு, அரசியல் வேறு. சினிமாவில் உடல்நிலை சரியில்லாமல் போனால் கூட ஓய்வெடுத்து நடிக்கலாம். ஆனால், அரசியல் தளம் வேறு. அது அவ்வளவு எளிதல்ல.
ஏற்கனவே சினிமா தரப்பில் இருந்து இயக்குனர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் விஜய்யை சந்தித்து பல கோரிக்கைகள் வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் கமல்ஹாசனும் சென்று வந்துள்ளார். எனவே, வெறும் சம்பிரதாயத்துக்காக நானும் சென்று சந்திப்பது நன்றாக இருக்காது. விஜய் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால், அவருக்கு 2 வருடங்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். அவரது தொண்டர்களும், ரசிகர்களும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். என்ன தவறு செய்தாலும் அது விஜய்க்குத்தான் பாதிப்பு என்பதை உணர வேண்டும்.
60 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு மாற்றம் தேவை என்று என்று மக்கள் நினைத்து இருக்கிறார்கள். விஜய்யை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். முதல்வர் விஜய்க்கு எனது வாழ்த்துகள்.நான் அரசியலுக்கு வந்து தேர்தலில் போட்டியிட்டு இருந்தால், நிச்சயம் 100 சதவீதம் வெற்றிபெற்று இருப்பேன். இதுவரை முதலமைச்சர் பதவியேற்பு விழாக்களில் நான் கலந்துகொள்ளவில்லை. ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றபோது, அவர் விருப்பப்பட்டு அழைத்ததால் நான் அந்த விழாவுக்கு சென்றிருந்தேன். இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.
* ஏற்கனவே சினிமா தரப்பில் இருந்து இயக்குனர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் விஜய்யை சந்தித்து பல கோரிக்கைகள் வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் கமல்ஹாசனும் சென்று வந்துள்ளார். எனவே, வெறும் சம்பிரதாயத்துக்காக நானும் சென்று சந்திப்பது நன்றாக இருக்காது.
