×

சதுரகிரியில் அமாவாசை வழிபாடு: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

 

வத்திராயிருப்பு: வைகாசி மாத அமாவாசை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் இன்று குவிந்த பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இக்கோயிலில் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி மற்றும் விஷேச நாட்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். வைகாசி மாத அமாவாசையான இன்று மதுரை, திருச்சி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் குவிந்தனர்.

காலை 6 மணியளவில் வனத்துறை கேட் திறக்கப்பட்டது. பக்தர்கள் மலைப்பாதை வழியாக சாரை, சாரையாக கோயிலுக்குச் சென்றனர். பக்தர்களின் உடமைகளை சோதனை செய்த வனத்துறை ஊழியர்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. இரவில் கோயிலில் தங்கக் கூடாது. மலைப்பாதையில் உள்ள நீரோடைகளில் குளிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கூறி அனுப்பி வைத்தனர். அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Tags : Chathuragiri ,Vathirairuppu ,Chathuragiri temple ,Vaikasi ,Chathuragiri Sundara Mahalingam Temple ,Western Ghats ,Virudhunagar district ,
× RELATED ஆங்கிலேயர் காலத்தில் பின்பற்றப்பட்ட...