பூதப்பாண்டி: கீரிப்பாறை ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் காட்டு யானை புகுந்ததால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ளது கீரிப்பாறை கிராமம். இங்கு அரசு ரப்பர் தோட்ட கழகம் செயல்பட்டு வருகிறது. ரப்பர் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அந்த பகுதியிலேயே குடியிருப்புகளும் உள்ளன. இந்த குடியிருப்பில் தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் கடந்த காலங்களில் அவ்வப்போது காட்டு யானைகள் வந்து சென்றது. பின்னர் சமீபகாலமாக யானைகள் வராமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் மலையில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை புகுந்தது. இந்த யானை குடியிருப்பு பகுதிக்குள் சர்வசாதாரணமாக உலா வந்ததோடு குடியிருப்புக்குள் இருந்த மரங்களை முறித்தது. குடியிருப்புக்குள் யானை வந்ததை கண்ட தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர். மேலும் அந்த ஒற்றை யானை நீண்ட நேரமாக அப்பகுதியில் சுற்றி வந்துவிட்டு பின்னர் காட்டுக்குள் சென்றது. இதனால் குடியிருப்புவாசிகள் நிம்மதி அடைந்தனர்.
எனினும் ஒற்றை காட்டு யானை மீண்டும் எப்போது வேண்டுமானாலும் குடியிருப்பு மற்றும் ரப்பர் தோட்டங்களுக்கு வரும் என்பதால் கீரிப்பாறை பகுதியில் சுற்றித்திரியும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என வனத்துறையினருக்கு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இரவில் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் யானை புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.
