×

வெயிலால் நாளுக்கு நாள் குறையும் வரத்து; ஒட்டன்சத்திரம் சந்தையில் டபுளானது தக்காளி விலை: ரூ.250க்கு விற்ற 14 கிலோ பெட்டி ரூ.500

 

ஒட்டன்சத்திரம்: வெயிலால் வரத்து குறைந்த நிலையில் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. சில தினங்களுக்கு முன் ரூ.250க்கு விற்ற 14 கிலோ தக்காளி பெட்டி நேற்று இரவு ரூ.500க்கு விற்பனையானது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் பிரபல காந்தி காய்கறி மார்க்கெட் உள்ளது. சுற்றுப்புற கிராமங்களில் விளைவிக்கப்படும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் இந்த சந்தைக்கு கொண்டு வருகின்றனர். மொத்த வியாபாரிகள் அவற்றை வாங்கி தமிழகத்தின் மற்ற நகரங்களுக்கும், கேரளம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர். தினசரி ரூ.கோடி கணக்கில் காய்கறி விற்பனையாகும்.

இந்த நிலையில், ஒட்டன்சத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள காவேரியம்மம்பட்டி, அரசப்பிள்ளைபட்டி, சத்திரப்பட்டி, விருப்பாச்சி, கள்ளிமந்தையம், தேவத்தூர், அம்பிளிக்கை, இடையகோட்டை, கேதையுறும்பு உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்தனர். தற்போது அறுவடை நடந்து வருகிறது. ஆனால், வெயிலால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு நாளுக்கு நாள் தக்காளி வரத்து குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.200லிருந்து ரூ.250 வரை மட்டுமே விற்பனையானது.

நேற்று இரவு நடந்த ஏலத்தில் 14 கிலோ தக்காளி பெட்டியின் ரூ.400லிருந்து 500 ரூபாய் வரை விற்பனையானது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘வரத்துக் குறைவால் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. வைகாசி மாதம் பிறந்த நிலையில் முகூர்த்த தினம், கோயில் திருவிழாக்கள் நடைபெற இருப்பதால், தக்காளி விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது’ என்றனர்.

Tags : Ottanchatram ,Ottanchatram, ,Dindigul district ,Gandhi… ,
× RELATED ஆங்கிலேயர் காலத்தில் பின்பற்றப்பட்ட...