×

ஆங்கிலேயர் காலத்தில் பின்பற்றப்பட்ட அதிகாரத்தின் அடையாளம்; முதல்வர் விஜய்யின் இருக்கையில் இருந்த ‘வெள்ளை துண்டு’ மாயம்: வெறும் விளம்பரத்திற்காக செய்யும் வினோத அரசியல்

 

சென்னை: தமிழக முதல்வர் விஜய்யின் நாற்காலியில் துண்டு அகற்றப்பட்டது வெறும் விளம்பர யுக்தியாகவே பார்க்கப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, சில கட்சிகளின் ஆதரவுடன் தவெக தலைவர் விஜய், கடந்த 10ம் தேதி முதல்வராக பதவி ஏற்றார். அதன் தொடர்ச்சியாக 14ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடந்த தொழில் மற்றும் வர்த்தகத்துறை ஆய்வுக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அப்போது, காலம் காலமாக அதிகாரத்தின் அடையாளமாக கருதப்படும் ‘வெள்ளை பருத்தி துண்டு’ விரிக்கப்பட்ட உயர்ரக நாற்காலியில் அவர் அமர்ந்திருந்தார். இந்த புகைப்படங்கள் முதல்வர் அலுவலகம் சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.

இதனிடையே, பருவநிலை பெண் ஆர்வலர் லிசிப்ரியா கங்குஜம் என்பவர், சமூக வலைதளங்களின் மூலம் அரசு அலுவலகங்களில் உள்ள இந்த வெள்ளை துண்டு விஐபி கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கையை முன்வைத்தார். இவரது பதிவை பார்த்த அடுத்த 24 மணி நேரத்திற்குள், முதல்வர் விஜய் தனது நாற்காலியில் இருந்த துண்டை அகற்றினார். நேற்று நடந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில், அந்த துண்டு மாயமாகி இருந்தது. ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளில் கவனம் செலுத்துவதை விட, இது போன்ற சிறிய மாற்றங்களை பெரிய சாதனையாக காட்டி விளம்பரம் தேடுவதில் புதிய அரசு ஆர்வம் காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

‘தனது கோரிக்கையை முதல்வர் ஏற்றுக்கொண்டார்’ என்று லிசிப்ரியா கங்குஜம் நன்றி தெரிவித்து பதிவிட்டதை தொடர்ந்து, இது திட்டமிட்ட ஒரு விளம்பர வேலையா என்ற சந்தேகத்தை அரசியல் விமர்சகர்கள் எழுப்புகின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் குளிர்சாதன வசதி இல்லாத சூழலில் வியர்வையை துடைக்க அறிமுகமான இந்த துண்டு முறை, தற்போது தேவையற்ற ஒன்றாகவே உள்ளது. இதை பெரிய சமூக மாற்றமாக சித்தரிப்பது வேடிக்கையாக இருப்பதாக பல்வேறு தரப்பினர் விமர்சிக்கின்றனர். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி செய்ததை போலவே, இங்கேயும் வெறும் தோற்றத்தை மட்டும் மாற்றி மக்களை கவர முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.

எந்தவிதமான கொள்கை ரீதியான மாற்றங்களையும் செய்யாமல், வெறும் நாற்காலியில் துண்டு போடுவதை தவிர்ப்பதன் மூலம் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வெறும் காட்சியமைப்பு மாற்றங்களை விடுத்து, உண்மையான மக்கள் நல திட்டங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Chief Minister ,Vijay ,Chennai ,Tamil Nadu ,Tamil Nadu Assembly elections ,Tevag ,
× RELATED ஆரணி ஆற்றுப்பாலம் அருகே மது வாங்க சென்றபோது விபத்து: இளைஞர் உயிரிழப்பு