திருநெல்வேலி: திருநல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் பகுதியில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நிமோனியா காய்ச்சல் பாதிப்பால் 40 நாட்களுக்கு மேலாக போராடிய சிறுமி பலியானதாக கூறப்படுகிறது.
நெல்லை மேலப்பாளையம், பெரிய குத்பா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் ரசூல். இவருடைய மகள் ரிஃப்கா பாத்திமா (வயது 4). இந்த சிறுமிக்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் பாதிப்பு இருந்து வந்தது. இதையடுத்து, நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிறுமியை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமிக்கு அடினோ வைரஸ் தொற்றால் நிமோனியா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தனர். இதை அடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுமி ரிஃப்கா பாத்திமா இன்று உயிரிழந்தார்.
நிமோனியா என்பது நுரையீரலை தாக்கும் ஒரு தீவிரமான தொற்று நோய். பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சை போன்ற நுண்கிருமிகள் மூலம் இந்த நோய் பரவுகிறது. கிருமி தொற்றால் நுரையீரலில் உள்ள காற்றுப் பைகளில் வீக்கம் ஏற்பட்டு, அவற்றில் நீர் அல்லது சளி கோர்த்துக்கொள்ளும் இதனால் மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, இருமல் மற்றும் கடுமையான காய்ச்சல் ஏற்படும்.
இதனிடையே காய்ச்சலை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காய்ச்சல் பரவல் குறித்து தகவல் அறிந்த வந்த சுகாதாரத் துறை அதிகாரிகள், மேலப்பாளையத்தில் முகாமிட்டு தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, சிறுமியின் இறப்பு குறித்து நெல்லை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் முரளி கூறுகையில், “உயிரிழந்த சிறுமிக்கு நுரையீரலில் தீவிர பாதிப்பு இருந்தது. அதனை நிமோனியா காய்ச்சல் என்று மருத்துவத்துறையில் குறிப்பிடுவோம். சிறுமி இறந்ததை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் பலருக்கும் உடனடியாக மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஆனால், பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை தவிர வேறு எந்த குழந்தைக்கும் இதுபோல நிமோனியா பாதிப்பு இல்லை” என்றார்.
