கொழும்பு: இலங்கையில் பெய்து வரும் கனமழையால் மட்டக்களப்பு உள்ளிட்ட 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. வீடுகளைவெள்ளம் சூழழ்ந்ததால் சுமார் 2500-க்கும் மேற்பட்டோர் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இலங்கை முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் கனமழை காரணமாக ரத்தினபுரி, காலி, மொனராகலை, மட்டக்களப்பு, களுத்துறை, கொழும்பு, புத்தளம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.
கனமழை காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் பலத்த காற்று காரணமாக மேற்கண்ட ஏழு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகப் இலங்கை பேரிடர் முகாமைத்துவ நிலையம் தகவல் தெரிவித்து உள்ளது. பாதிக்கப்பட்ட சுமார் 490 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
துரதிர்ஷ்டவசமாக, இந்த தீவிர மழை காரணமாக மட்டக்களப்புப் பகுதியில் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது. கனமழை மற்றும் பலத்த காற்றும் காரணமாக 100-க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள். கனமழை காரணமாக புத்தளம் ரயில் பாதை நீரில் மூழ்கியுள்ளதோடு, வெள்ளப்பெருக்கு காரணமாக கொழும்பு உட்படப் பல பகுதிகளில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சில பகுதிகளில் 200 மி.மீ-க்கும் அதிகமாக தொடர்ந்து கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என இலங்கை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
