×

இருநூறு போயிங் விமானங்கள் வாங்க ஒப்பந்தம்; ஜி ஜின்பிங் கதாபாத்திரத்தில் நடிக்க ஹாலிவுட்டில் யாருமே இல்லை: சீன அதிபரை புகழ்ந்து தள்ளிய டிரம்ப்

பீஜிங்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனாவுக்கு மேற்கொண்டுள்ள அரசுமுறைப் பயணம் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களுடன் நிறைவடைந்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக நேற்று சீனாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தில் தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் என்விடியா தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் உள்ளிட்ட உயர்மட்ட வர்த்தகக் குழுவினர் பங்கேற்றனர். இதில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவிடமிருந்து 200 போயிங் விமானங்களை வாங்க சீனா சம்மதம் தெரிவித்தது.

இது அமெரிக்கப் பொருளாதாரத்தில் முக்கிய வெற்றியாகக் கருதப்படுகிறது. மேலும் ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்பதிலும், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து வைப்பதிலும் இரு நாடுகளும் உடன்பாடு கண்டன. அமெரிக்கா ஒரு வீழ்ச்சியடைந்த நாடு என்று தான் முன்னர் கூறிய கருத்துக்கள், முந்தைய அரசைத்தான் குறிக்கும் என்று அதிபர் ஜி ஜின்பிங் டிரம்பிடம் விளக்கம் அளித்தார். பயணத்தின் இறுதி நாளான இன்று ஜி ஜின்பிங்கைச் சந்தித்த டிரம்ப் அவரை வெகுவாகப் புகழ்ந்து பேசினார்.

அப்போது, ‘இவரைப் போன்ற ஒரு நபரை ஹாலிவுட்டில் கூட பார்க்க முடியாது. ஜி ஜின்பிங் வகிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க ஹாலிவுட்டில் யாருமே இல்லை’ என்று டிரம்ப் பாராட்டியது உலக அரங்கில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. அதே சமயம் தைவான் விவகாரத்தைச் சரியாகக் கையாளாவிட்டால் மோதல்கள் வெடிக்கும் என்று ஜி ஜின்பிங் எச்சரித்தார். இதற்கு டிரம்ப் தரப்பில் பதில் ஏதும் அளிக்கப்படவில்லை. இறுதியாக இரு நாட்டுத் தலைவர்களும் நீண்டகால திட்டம் மற்றும் வியூகம் குறித்த புதிய பார்வையை உருவாக்கிவிட்டு பீஜிங்கிலிருந்து டிரம்ப் விடைபெற்றார்.

Tags : Boeing ,Hollywood ,Xi Jinping ,Trump ,BEIJING ,U.S. ,PRESIDENT ,DONALD TRUMP ,CHINA ,US ,Elon Musk ,
× RELATED கோடிக்கணக்கான முதலீடு ஒப்பந்த...