வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒஹியோ மாகாணம் (Ohio State) அக்ரான் (Akron) விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை சிறிய ரக விமானம் புறப்பட்டது. விமானத்தில் 2 பேர் பயணித்தனர். அக்ரான் விமான நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு வீட்டின் மீது திடீரென அந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானம் தீப்பற்றி எரிந்தது. விமானத்தில் பயணித்த இருவரும் உயிரிழந்ததாக மாநில நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு தெரிவித்துள்ளது. விமானம் வீட்டின் மீது மோதியபோது, ஒரு தம்பதியினரும் அவர்களது இரு குழந்தைகளும் அந்த வீட்டிற்குள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பது மிகவும் அதிர்ஷ்டவசமானது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனிடையே விபத்தில் சிக்கிய வீட்டில் இருந்தவர்களும், அந்த வீட்டிற்கு அருகில் இருந்த குடியிருப்பும் காலி செய்யப்பட்டதாகவும், அதில் இருந்தவர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும் அக்ரான் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
