×

பி.எம்.ஐ. கணக்கு சரியா?தவறா?

நன்றி குங்குமம் தோழி

உடல் எடை குறைப்பில் நாம் அனைவரும் தவறாமல் அறிந்து வைத்திருக்கும் வார்த்தை ‘பி.எம்.ஐ’. ஆனால், இந்த பி.எம்.ஐ. என்பது உடல் எடை குறைப்பில் சரியான அளவுகோல் இல்லை என்று சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன. அப்படியெனில், ஏன் அது சரியானது இல்லை? இதில் இயன்முறை மருத்துவத்தின் பங்கு என்ன? போன்றவற்றை இங்கே தெரிந்துகொள்வோம், வாருங்கள்…

பி.எம்.ஐ…

நம் உயரத்திற்கு ஏற்ப நமது உடல் எடை எவ்வளவு இருக்க வேண்டும் என்ற கணக்கை சொல்வதே பி.எம்.ஐ. உலக சுகாதார மையத்தால் அங்கீகரிக்கப்பட்ட BMI (Body Mass Index) விதிமுறையினைக் கொண்டு ஒருவரின் உடல் பருமனானது கணக்கிடப்படுகிறது. அதாவது, பி.எம். ஐ = எடை (கிலோ), உயரம் (மீட்டர்)2///ஸ்கொயர்.

உதாரணமாக, உங்கள் எடை 55 கிலோ, உயரம் 155 செ.மீட்டர் என்றால் 55 / (1.55 * 1.55) = 22.9. நீங்கள் ஆரோக்கியமான எடையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

உடல் எடை

நம் உடல் எடை என்பது நமது உடலில் உள்ள நீர், கொழுப்புச் சத்து, தசை அடர்த்தி (Muscle Mass) என அனைத்தும் உள்ளடக்கியவை.

‘பி.எம்.ஐ.’யின் பாதகம்

நம் உயரத்தையும் எடையையும் பொறுத்தே பி.எம்.ஐ. அமைகிறது என்பதால், நம் உடல் கொழுப்பின் அளவு எவ்வளவு சதவீதம் இருக்க வேண்டும் என்பதனை அதில் தெரிந்துகொள்ள முடியாது.

உதாரணம் 1: ஒருவருக்கு பி.எம்.ஐ. முப்பதாக இருக்கலாம். ஆனால், அவரது தசை சதவிகிதம்தான் அதிகமாக இருக்கிறது என்றால், அதுவும் அதிகமான பி.எம்.ஐ. கணக்கே ஆகிறது. இதனால் அவர் உடல் எடை குறைக்க வேண்டும் என நினைக்கத் தேவையில்லை. தசை அடர்த்தி அதிகம் இருப்பது உடலுக்கு நல்லது.

உதாரணம் 2: இதுவே ஒருவருக்கு வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பின் அளவு அதிகமாக இருந்தும், அவர் ஒல்லியாக இருந்து அவரின் பி.எம்.ஐ. குறைவாகவே (20) காட்டுகிறது என்றால், இதனால் அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என அர்த்தம் இல்லை. எனவே உடல் எடை குறைப்பு என்பது வெறும் எடை குறைப்பு இல்லை, அது கொழுப்பினை குறைப்பது. அதே சமயம் தசை அடர்த்தி அதிகமாக இருத்தல் நல்லது.

மொத்தத்தில் நாம் உடல் பருமனாக இல்லை என்பதனை எவ்வாறு தெரிந்து கொள்வது என்றால், உடலில் உள்ள கொழுப்புச் சத்தின் அளவு, நம் வயிற்றை சுற்றி உள்ள கொழுப்புச் சத்தின் அளவு, ரத்த கொலஸ்ட்ரால் (Cholesterol) அளவு எவ்வளவு இருக்கிறது என்ற இந்த மூன்று அளவுகளையும் வைத்துதான் தெரிந்துகொள்ள வேண்டும்.

தடுக்கப்படும் சிக்கல்கள்…

பி.எம்.ஐ. கணக்கைக் கொண்டு நாம் எடை குறைப்பு செய்ய நினைத்தால், பல சிக்கல்கள் உருவாகலாம். உதாரணமாக, தசை சதவிகிதத்தை இழப்பது, ஊட்டச்சத்துக் குறைபாடு, வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பு மேலும் அதிகரிப்பது என நம் எடை குறைப்பு முயற்சி பலன் இல்லாமல் போகும் என்பதனை உணர வேண்டும்.

இயன்முறை மருத்துவத்தின் பங்கு…

ஒருவர் உடல் எடை குறைக்க வேண்டும் என நினைத்தால் முதலில் ஓர் இயன்முறை மருத்துவரை அணுகவேண்டும். அவர் போதுமான பரிசோதனைகள் மேற்கொண்டு, நம் உடலிலுள்ள கொழுப்பின் அளவு, தசை அடர்த்தி எவ்வளவு போன்றவற்றை அறிந்து, பின்பு அதற்கு ஏற்றவாறு உடல் எடை குறைப்பில் எத்தனை சதவிகிதம் குறைக்க வேண்டுமோ அதற்கான உடற்பயிற்சிகளை பரிந்துரைத்து கற்றுக் கொடுப்பர்.

இதனை ஆன்லைன் வழியாகவும் செய்யலாம். மேலும், பொது மருத்துவரையும், உணவியல் நிபுணரையும் அணுகி போதுமான ஆலோசனைகள் எடுத்துக் கொள்ளுதல் அவசியம். மொத்தத்தில் 19 முதல் 25-க்கு உட்பட்ட பி.எம்.ஐ. கணக்கு ஆரோக்கியமானது என்பதும் இல்லை, 25-க்கு மேல் பி.எம்.ஐ. இருந்தால் அது ஆரோக்கியம் இல்லை என்பதும் இல்லை. எனவே, உடல் எடை குறைப்பு என்பது ஆரோக்கியமான வழியில் கொழுப்பினைக் குறைப்பதே ஆகும். இதனை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டு போதிய விழிப்புணர்வோடு உடலினை பேணிக் காப்பது இன்றைய காலக்கட்டத்தின் அவசியமாகிறது.

தொகுப்பு: கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

 

Tags : B. M. I. ,
× RELATED பெண்களுக்கு அதிக முதலீட்டில் தயக்கமும் பயமும் இருக்கிறது!