- பிரதமர் மோடி
- காந்திநகர்
- ஈரான்
- ஐக்கிய
- மாநிலங்களில்
- மத்திய கிழக்கு
- இந்தியா
- சர்தார் தம் ஹோட்டல்
- வதோதரா, குஜராத்
காந்திநகர்: மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அதிகரித்து வரும் பதற்றம் உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கக்கூடும் என்பதால், குஜராத்தின் வடோதராவில் நடைபெற்ற சர்தார் தாம் விடுதி திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு முக்கியமான ஆலோசனைகளை வழங்கினார்.
கொரோனா இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நெருக்கடியாக இருந்தது போல, மேற்கு ஆசியாவின் தற்போதைய போர்ச் சூழல் இந்தத் தசாப்தத்தின் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளதாக அவர் எச்சரித்தார். நிலைமை சீராகும் வரை மக்கள் சிறிய அர்த்தமுள்ள மாற்றங்களைத் தங்கள் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்திய பிரதமர், பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்க கார் பூலிங் முறையைப் பின்பற்றுமாறும், முடிந்தவரை மெட்ரோ மற்றும் மின்சாரப் பேருந்துகள் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தினார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அலுவலகப் பணிகளை ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’ (Work from Home) முறையிலும், கூட்டங்களை மெய்நிகர் (Virtual) வாயிலாகவும் நடத்துவதன் மூலம் பயணத் தேவைகளைக் குறைக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார். இதேபோல், பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
பொருளாதார ரீதியாக நாட்டை வலுப்படுத்த, தங்கம் வாங்குவதைத் தற்காலிகமாகத் தவிர்க்குமாறும், வெளிநாட்டுப் பொருட்களுக்குப் பதிலாக உள்நாட்டுத் தயாரிப்புகளையே பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். மேலும், பெரும் செலவு செய்து வெளிநாடுகளில் திருமணங்கள் (Destination Wedding) நடத்துவதைத் தவிர்த்து, இந்தியாவிலேயே அவற்றை நடத்த வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
விவசாயிகளை ரசாயன உரங்களைக் குறைத்து இயற்கை விவசாயத்திற்கு மாற ஊக்குவித்த அவர், சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பது உடல்நலத்திற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் நல்லது என்று சுட்டிக்காட்டினார். விழிப்புணர்வு, சேமிப்பு மற்றும் தற்சார்பு ஆகியவையே இந்த உலகளாவிய நெருக்கடியிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் என்று பிரதமர் தனது உரையில் உறுதியாகத் தெரிவித்தார்.
