×

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சிக்கான அலங்கார பணிகள் துவக்கம்: மாடங்களில் மலர் தொட்டிகள் அடுக்கி வைப்பு

ஊட்டி: மலர் கண்காட்சியை முன்னிட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள மாடங்களில் மலர் தொட்டிகள் அடுக்கும் பணிகள் மற்றும் பூங்கா முழுவதிலும் அலங்கார பணிகள் துவக்கப்பட்டுள்ளது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டு தோறும் மே மாதத்தில் பல்வேறு விழாக்கள் சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் நடத்தப்படுகிறது. இதில், முக்கிய விழாவாக அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படும். இந்த மலர் கண்காட்சியை காண வெளி நாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து லட்சக் கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஆண்டு தோறும் மே மாதம் 2வது அல்லது 3வது வாரத்தில் இந்த மலர் கண்காட்சி நடத்தப்படும். இம்முறை சட்டமன்ற தேர்தல் நடந்த நிலையில் மலர்க்கண்காட்சி நடத்தும் தேதிகள் இதுவரை அறிவிக்கப்படாமல் உள்ளது. இம்மாதம் 15ஆம் தேதி மலர் கண்காட்சி துவக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மலர் கண்காட்சியின் போது, ஆண்டு தோறும் பூங்காவில் 35 ஆயிரம் மலர் தொட்டிகள் தயார் செய்யப்பட்டு மலர் அலங்காரங்கள் செய்யப்படும். இம்முறை, 40 ஆயிரம் தொட்டிகளில் மேரிகோல்டு, பேன்சி, பிட்டடோனியா, சால்வியா, பேன்சி, லில்லியம், பெகுனியா உள்ளிட்ட 300க்கு மேற்பட்ட பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு. தற்போது மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

மலர் கண்காட்சிக்கு ஓரிரு நாட்களே உள்ள நிலையில், மாடங்களில் பூந்தொட்டிகள் அடுக்கும் பணிகள் துவங்கியது. பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானத்தில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்காமல் பசுமை நிறத்துடன் இருக்கும் வகையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கோடை விழா நடத்த பூங்கா மைதானத்தில் மேடை அமைக்கும் பணி, மலர் அலங்காரங்களை செய்ய மேடை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

Tags : Ooty State Botanical Garden ,State Botanic Garden ,Ooty ,Flower Exhibition ,State Botany ,
× RELATED பண்ருட்டியில் பலா திருவிழா கோலாகலம்:...