காலம் காலமாக மனிதர்களின் நாக்கை அடிமைப்படுத்தி வைத்திருப்பது சுவைக்காக பயன்படுத்தப்படும் உப்பும், சர்க்கரையும் தான். உப்பில்லா பண்டம் குப்பையிலே என்றொரு பழமொழியும் உண்டு. ஆனால், அதே சமயம் ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்று மற்ெறாரு சொல்லாடல் இருப்பதையும் இங்கே நாம் உணர வேண்டும். உலகம் முழுவதும் மாரடைப்பால் அதிகளவு மரணங்கள் நிகழ்ந்து வருகிறது. சிறுநீரக ேகாளாறு, ரத்த அழுத்தம் தொடர்பான நோய்களும் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது, அதிகளவில் பயன்படுத்தப்படும் உப்பு தான் என்று, பல்வேறு மருத்துவ ஆய்வுகள் தெரிவித்துள்ளது. அதிகளவில் உப்பை பயன்படுத்துவதால் ஆண்டுக்கு 25 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். லட்சக்கணக்கானோர் இதயநோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அதேபோல், மற்ெறாரு அபாயமாக இருப்பது சர்க்கரை. 8 வயதுக்கு உட்பட்ட குழந்தை தினசரி 12 கிராமும், அதற்கு மேற்பட்ட வயதினர் தினசரி 24 கிராமும் மட்டுமே சர்க்கரையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஆனால், தற்போது நாம் உண்ணும் அனைத்து உணவுகளிலும் சர்க்கரையை பயன்படுத்தி வருகிறோம். இனிப்பான பழங்களில் ஜூஸ் போட்டால் கூட, அதிலும் மேலும் இனிப்புக்காக சர்க்கரையை கலந்து குடிக்கும் வழக்கமே நம்மில் பலருக்கு உள்ளது. இதன்விளைவாக சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, இதயநோய்கள், உடல் பருமன், கல்லீரல் நோய் என்று பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறோம்.
இது ஒருபுறமிருக்க, தற்போது வீட்டு சமையல் அறையில் தயாரிக்கப்படும் உணவுகளை விட, பாக்கெட் உணவுகளே மனிதர்களை சுண்டி இழுத்து வருகிறது. பசிக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் சாப்பிடுபவர்களை விட ருசிக்காக சாப்பிடுபவர்களே அதிகம். இதை கவனத்தில் வைத்து விதம்விதமான நூதன உணவுகளை தயாரித்து உணவு நிறுவனங்கள் கல்லா கட்டி வருகின்றன. இதுபோன்ற உணவுகளில் மீண்டும், மீண்டும் சாப்பிடத் தூண்டும் குளூட்டோமைட், மோனோசோடியம் போன்றவை கலக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த வகையில், சுவை என்ற பெயரில் உயிருக்கு உலை வைக்கிறது பாக்கெட் உணவுகள். எனவே, பாக்கெட் உணவுகளில் உப்பும், சர்க்கரையும் மருத்துவ நிபுணர்கள் நிர்ணயித்த அளவில் சேர்க்கப்படுகிறதா? இதை அரசுகள் கண்காணிக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து நுகர்வோர் மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: சமீப ஆண்டுகளாக ஆரோக்கிய பானம், புரதச்சத்து மிகுந்த பிஸ்கட் மற்றும் எண்ணெய்யில் வறுக்கப்பட்ட உணவுப்பொருட்கள், பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. அந்த பொருட்களில் ஆரோக்கியத்ைத அடிப்படையாக கொண்டு, சுவைக்கான பொருட்கள் ேசர்த்துள்ளது குறித்து எந்த தகவலும் இல்லை. உணவு பொருட்கள் பாதுகாப்பு சட்டத்தில், கடுமையான கட்டுப்பாடுகள் இல்லாமல் இருப்பது தான் இதற்கு காரணம். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்பட்ட பொருட்களின் விவரங்கள், ஆங்கிலத்தில் சிறிதாக பாக்கெட்டில் எழுதியிருக்கும். வாங்கும் மக்கள் யாருக்கும் பெரும்பாலும் அது தெரிவதில்லை.
பலருக்கு புரிவதும் இல்லை. இதுபோன்ற பிரச்னைகளை தடுப்பதற்கு, உணவு பாக்கெட்டுகளில் உப்பு, சர்க்கரை அதிமாக இருந்தால், டிராபிக் சிக்னல் போல் எச்சரிக்கை லேபிள் ஒட்ட வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக அளவில் உப்பும், சர்க்கரையும் சேர்த்தால் மட்டுமே, உணவு கெட்டு போகாமல் இருக்கும். எனவே, இதற்காக சாக்ரின், சோடியம் நைட்ரேட், மோனோசோடியம் ஆகியவற்றை உணவுகளில் சேர்க்கின்றனர். இவை உணவை கெட்டு போகாமல் பாதுகாக்கிறது. ஆனால், இவற்றை சாப்பிடுபவர்களுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகிறது. ஜூஸ் போன்ற உணவுகளில் கெட்டுப்போகாமல் இருக்க சாக்ரின் அதிகமாக கலக்கப்படுகிறது.
நகரங்களிலும், கிராமங்களிலும் பதப்படுத்தும் உணவுகளின் பழக்கம் அதிகரித்துள்ளது. உணவை பதப்படுத்துவதற்கு அதிக அளவிலான உப்பும், சர்க்கரையும் சேர்க்கப்படுவதால் சிறு வயதிலேயே அதிக உடல் எடை, நீரிழிவு நோய் அபாயங்கள் வாய்ப்புகள் அதிகமாகின்றன. உணவு பொருட்களில் என்ன கலந்திருக்கிறது என்பதை, பெரும்பாலும் வாங்கும் மக்கள் அறிவதில்லை. எனவே, பதப்படுத்தப்பட்ட உணவு பாக்கெட்டில்களில் அதிக உப்பும், சர்க்கரையும் கலந்திருப்பதை லேபிள்கள் மூலம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கற்றல் திறனுக்கு உலை வைக்கிறது
இந்தியாவில் செயல்படும் சந்தை பொருளாதார கொள்கை என்பது, நுகர்வோர் குறித்த அக்கறை இல்லாமல் அரங்கேற்றப்பட்டு வருகிறது. உதாரணமாக குழந்தைகளுக்கான ஆரோக்கிய பானங்களும், புரதச்சத்து மிக்க நொறுக்கு தீனிகளும் சந்தைப்படுத்தும் விதம் மிகவும் அலட்சியமாக உள்ளது. வலிமையான நுகர்வோர் அமைப்புகளும், நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களும் இல்லாத நிலையில், பெருநிறுவனங்கள் தரமில்லாத பொருட்களை விளம்பரப்படுத்தி, கொள்ளை லாபம் ஈட்டி வருகிறது. குறிப்பாக குழந்தைகளின் கற்றல் மற்றும் நினைவு திறனை பாக்கெட் உணவுகள் குறைக்கிறது.
எனவே, நாளைய தலைமுறையை கருத்தில் ெகாண்டு நடவடிக்கை எடுப்பது அவசியம் என்கின்றனர் நுகர்வோர் மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள். ‘‘பதப்படுத்தப்பட்ட உணவு பாக்கெட்டில் எவ்வளவு உப்பு, சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது என்பதை கட்டாயம் குறிப்பிட வேண்டும். இந்த உத்தரவை மதிக்காத நிறுவனங்கள் மீது, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’’ என்று விளக்கம் அளித்துள்ளது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு துறை.
அபாயத்தை உணரணும்
இன்றைய நவீன வாழ்க்கை முறையில், 10 வயது குழந்தை முதல் 60 வயது பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் ஏதாவது ஒரு நோய்க்கு ஆளாகின்றனர். நமது உணவு சார்ந்த பழக்க, வழக்கங்கள் முற்றிலும் மாறி விட்டதே இதற்கு முக்கிய காரணம். இந்த நிலை தொடர்ந்தால், நம்முடைய அடுத்த தலைமுறை அனுபவிக்கும் வேதனைகளும் அதிகமாகும். இந்தியாவின் மக்கள் தொகையில் 11 சதவீதம் பேர், சர்க்கரை நோயாளிகளாக உள்ளனர். 15 சதவீதம் பேர் சர்க்கரை நோயாளிகளாக மாறும் அபாயம் உள்ளது. நகர்ப்புறங்களில் 16 சதவீதமும், கிராமப்புறங்களில் 9 சதவீதமும் சர்க்கரை நோயாளிகள் உள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இதை உணர்ந்து நமது உணவு பழக்கத்தை மாற்ற வேண்டியது மிகவும் முக்கியம் என்கின்றனர் உணவியல் சார்ந்த மருத்துவ நிபுணர்கள்.
