- சேலம் அரசு மருத்துவமனை
- சேலம்
- முகம்மது ஹுசைன்
- ஆதிரம்பட்டினம் உலாத்ரு, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆயுள் தண்டனை கைதி கழிவறை ஜன்னலை உடைத்து தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் முகமது உசேன் (36). இவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதற்காக ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். அத்துடன் வீடு புகுந்து திருட்டு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இதனையடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முகமது உசேன், அடிக்கடி தற்கொலை முயற்சி உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தார். சமீபத்தில் திருச்சி மத்திய சிறையில் உள்ள டவரின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து, கடந்த மாதம் 18ம் தேதி திருச்சி மத்திய சிறையில் இருந்து, சேலம் மத்திய சிறைக்கு முகமது உசேன் மாற்றப்பட்டார். இந்நிலையில், தனக்கு மூல நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முகமது உசேன் தெரிவித்தார். இதனையடுத்து சிறையில் உள்ள மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து விட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குள்ள என்எம்எஸ் வார்டின் முதலாவது மாடியில் கடந்த 24ம் தேதி முதல், முகமது உசேன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவருக்கு பாதுகாப்பாக தலைமை வார்டனுடன் சேர்த்து 3 பேர் அடங்கிய குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், முகமது உசேன் கழிவறைக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து வார்டன் ஒருவர், முகமது உசேனை கழிவறைக்கு அழைத்து சென்றார். உள்ளே சென்ற உசேன், தண்ணீர் திறந்து விட்டுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் முகமது உசேன் வெளியே வரவில்லை. அங்கு பாதுகாப்பிற்கு இருந்த வார்டனும் இதனை மறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இரவு 10 மணியளவில் செவிலியர் ஒருவர், முகமது உசேனுக்கு மருந்து கொடுக்க வந்துள்ளார். அப்போது முகமது உசேனை தேடிய போது, கழிவறையில் இருந்து தண்ணீர் சத்தம் மட்டும் வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த வார்டன்கள் கழிவறையின் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது, உள்ளே முகமது உசேன் இல்லாததுடன், கழிவறையின் ஜன்னல் உடைக்கப்பட்டிருந்தது. கழிவறை ஜன்னலை உடைத்து வெளியே வந்த முகமது உசேன், முதல் மாடியிலிருந்து பைப்லைனை பிடித்து கீழே இறங்கி மருத்துவமனையில் இருந்து தப்பியோடினார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயில் வார்டன்கள், மருத்துவமனை முழுவதும் சல்லடை போட்டு தேடினர். ஆனால் எங்கு தேடியும் முகமது உசேனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மருத்துவமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சிறை கண்காணிப்பாளர் வினோத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த டவுன் போலீஸ் உதவி கமிஷனர் சரவணன் தலைமையிலான போலீசார் மருத்துவமனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக தேடினர். இதனிடையே, மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது இரவு 10.15 மணிக்கு முகமது உசேன் மருத்துவமனையில் இருந்து வெளியேறுவது பதிவாகியிருந்தது. அத்துடன், டூவீலருடன் பெண் ஒருவர் காத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து தப்பியோட முன்னதாகவே திட்டமிட்டிருந்த முகமது உசேன், அதற்கேற்ப அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
