- Saramari
- படுகொலை
- போச்சம்பள்ளி
- Bochampalli
- சத்யசீலன்
- ஜம்புகுபட்டி கிராமம்
- போசம்பள்ளி
- கிருஷ்ணகிரி மாவட்டம்
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஜம்புகுடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியசீலன் (50). விவசாயியான இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவரது மனைவி முருகம்மாள் (38). இவர் சத்துணவு அமைப்பாளராக உள்ளார். இவர்களுக்கு கோமதி என்ற மகளும், மணிகண்டன் (17) என்ற மகனும் உள்ளனர்.
இதில் கோமதிக்கு திருமணமாகி விட்டது. எப்போதும் காலையில் வீட்டில் இருந்து வெளியே செல்லும் சத்தியசீலன், இரவு 7 மணிக்குள் வீட்டுக்கு வந்துவிடுவார். நேற்று முன்தினம் காலை, வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், மீண்டும் இரவு வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரது செல்போனை தொடர்பு கொள்ள முயன்ற போது முடியவில்லை. மேலும், அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும், எங்கும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று காலை, அதே பகுதியில் சத்தியசீலனுக்கு சொந்தமான மற்றொரு நிலத்தில், தலையில் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்பி தங்கதுரை, டிஎஸ்பி தனசேகர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்த சத்தியசீலனின் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில், நேற்று முன்தினம் அவர் தனக்கு சொந்தமான நிலத்தை பார்க்க வந்தபோது, இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகியிருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும், மோப்ப நாய் சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது.
இதையடுத்து, அவரது சடலத்தை போலீசார் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முன்விரோதத்தில் சத்தியசீலன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு நடந்து வருகிறது. இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
