×

முன்னணி ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியவர்; நடிகை ரவீணா ரவி காதல் திருமணம்: ‘வாலாட்டி’ திரைப்பட இயக்குனரை மணந்தார்

சென்னை: பிரபல டப்பிங் கலைஞரும் குணச்சித்திர நடிகையுமான ஸ்ரீஜா ரவியின் மகள் ரவீணா ரவி. இவரும் ஒரு டப்பிங் கலைஞர்தான். முன்னணி ஹீரோயின்கள் சமந்தா, காஜல் அகர்வால், ரீத்து வர்மா, ராசி கன்னா, எமி ஜாக்சன், அமலா பால் மற்றும் ஸ்ரீதிவ்யா உள்பட பலருக்கு டப்பிங் பேசியிருக்கிறார். அவரது தந்தை ரவி டப்பிங் கலைஞராக இருந்துகொண்டே சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலமாகி விட்டார். தமிழில் `ஒரு கிடாயின் கருணை மனு’, `காவல்துறை உங்கள் நண்பன்’, `ராக்கி’, `லவ் டுடே’, `மாமன்னன்’ போன்ற படங்களில் ரவீணா ரவி நடித்துள்ளார். இந்நிலையில், இன்று அவர் திடீரென்று திருமணம் செய்துகொண்டார்.

இதுகுறித்து அவரது தாயார் ஜா ரவி தனது இன்ஸ்டாகிராமில் இன்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
எனது அன்பு மகள் ரவீணா ரவி, ‘வாலாட்டி’ என்ற படத்தின் இயக்குனர் தேவன் என்பவருடன் இணைந்து, தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள இந்த நேரத்தில், உங்கள் ஆசிகளையும் பிரார்த்தனைகளையும் வேண்டுகிறேன். இந்த திருமணம் எளிமையாக, எங்கள் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடந்தது. எனது கணவர் ரவி இல்லாமல் இத்தகைய சிறப்புமிக்க நிகழ்வை கொண்டாடுவது என்பது என்னை ஆழ்ந்த உணர்ச்சிப்பெருக்கில் மூழ்க வைத்துள்ளது. அனைத்தும் குறுகிய காலத்திற்குள் நடந்துவிட்டது. விரிவான ஏற்பாடுகள் எதையும் செய்வதற்கான மன வலிமையோ, உடல் வலிமையோ என்னிடம் இல்லை. தேவன் மூலம் பாசமான ஒரு குடும்பத்தை அடைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒரு தாயாக எனக்கு கிடைத்த மகிழ்ச்சி என்னவென்றால், ரவீணா தனது புதிய குடும்பத்தினரின் அன்பு மற்றும் ஆதரவுடன், தனது டப்பிங் மற்றும் நடிப்பு சார்ந்த பயணத்தை தொடர்வார் என்பதுதான். என்னால் தனிப்பட்ட முறையில் அழைக்கவோ அல்லது தகவல் தெரிவிக்கவோ இயலாத அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ரவீணாவும் தேவனும் இணைந்து தங்கள் அழகான வாழ்க்கை பயணத்தை தொடங்கும் வேளையில் அவர்களை மனதார ஆசீர்வதியுங்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Raveena Ravi ,Chennai ,Sreeja Ravi ,Samantha ,Kajal Aggarwal ,Rithu Verma ,Raasi Khanna ,Amy Jackson ,Amala Paul ,Sridivya ,
× RELATED வங்கக் கடலோரத்தில் வளிமண்டல காற்று...