×

நொடிக்கு நொடி பரபரப்பு தவெகவுக்கு தண்ணி காட்டிய திருமாவளவன்: ஒருபுறம் ஆளுநர், மறுபுறம் ஆதரவு கிடைக்குமா என்ற போராட்டம்

 

சென்னை: தவெக ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டியை நிரூபிக்க விசிகவின் ஆதரவை பெற கடந்த இரண்டு நாட்களாக தவெக – விசிக இடையே நடந்த திக்.. திக்.. போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் மெஜாரிட்டியை நிரூபிக்க தேவையான இடங்கள் இல்லாததால் ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வந்தது. திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ், இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ள நிலையில், தவெக கூட்டணி எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 116 ஆக இருந்தது.

ஆனாலும், பெரும்பான்மைக்கு இன்னும் 2 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விசிக உடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆரம்பத்தில் ஆதரவு தர மறுத்துவிட்டது. இதனால் விசிக ஆதரவு தந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக விஜய் தரப்பு திருமாவளவனுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் நேற்று முன்தினம் எந்த முடிவும் எட்டவில்லை.

அன்று மாலையே விசிகவின் உயர்நிலைக் கூட்டம் கூடி ஆலோசனை நடத்தியது. அதில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் என்ன மாதிரியான முடிவு என்பதை விசிக அறிவிக்க மறுத்து விட்டது. இதனால் விசிக ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து முதல்வராக பதவி ஏற்க அனுமதி வாங்கி விடலாம் என்று நினைத்த தவெகவுக்கு இடி மேல் இடி விழுந்தது. ஆளுநரும் அழைக்க மறுக்கிறார், விசிகவும் முடிவை அறிவிக்க மறுக்கிறது.

இதனால் அன்று மாலை முதல் தவெகவுக்கு ஒவ்வொரு நிமிடங்களும் திக்.. திக்… நிமிடங்களாகவே நகர்ந்தது. ஒரு வழியாக நேற்று காலை விசிக தனது முடிவை அறிவிக்கும் என்று தெரிவித்தது. அதே நேரம் வன்னியரசு, சிந்தனை செல்வன் ஆகியோரது டிவிட்டர் பதிவுகள் விஜய்க்கு பல்வேறு கேள்விகளை எழுப்பும் விதமாக இருந்தது. இதனால் விசிக ஆதரவு தவெகவுக்கு ஆதரவு கிடைக்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது.

நேற்று காலையில் விசிக ஆதரவு கிடைக்குமா என்று தவெகவினரும் அசோக்நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் குவியத் தொடங்கி விட்டனர். காலையில் திருமாவளவனின் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என்ற தகவலை தொடர்ந்து ஊடகத்தினரும் குவிந்திருந்தனர். இதனால் இன்னும் ஒரு சில நிமிடங்களில் முடிவு அறிவிக்கப்படும் என்ற தலைப்பு செய்திகள் அனல் பறந்தன. ஆனாலும் விசிக தனது முடிவை அறிவிக்கவில்லை.

இதனால் விஜய் கடும் அப்செட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் ஆளுநரை சமாளிக்க முடியவில்லை, இன்னொரு புறம் விசிக என்ன சொல்லப் போகிறதோ என்ற பதற்றம் என விஜய்க்கு திருமாவளவன் தண்ணி காட்டி விட்டார் என்றே சொல்லலாம். அதன் பிறகு 4 மணிக்கு திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் அறிவிப்பார் என்ற தகவல்கள் வெளியானது. அதை எதிர்பார்த்து அனைவரும் காத்திருந்த நிலையில் 4 மணிக்கும் எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை.

இப்படியே விசிக இழுத்து கொண்டு சென்ற நிலையில், ஆதவ் அர்ஜூனா திடீரென திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவு கடிதம் வழங்கி விட்டார் என்று காரில் செல்லும் போது ஒரு பேட்டியை கொடுத்து விட்டு சென்றுவிட்டார். முதலில் ஆதவ் சொல்வது உண்மையா என்ற கேள்வியும் எழுந்தது. ஏனென்றால் கடந்த இரண்டு நாட்களாக நடந்த நகர்வுகள் அப்படிப்பட்ட எண்ணத்தை ஏற்படுத்திவிட்டது. இதை தொடர்ந்து திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் பிறகு தான் தமிழ்நாட்டில் நிலவி வந்த திக் திக்.. போராட்டம் முடிவுக்கு வந்தது என்றே சொல்லலாம்.

Tags : Thirumavalavan ,Thaveka ,Chennai ,Tamil Nadu ,
× RELATED ‘என்னை மீறி ஒருத்தன் இறங்கினா...