×

மேற்குவங்க புதிய முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்பு

 

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் புதிய முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்க இருக்கிறார். பிரதமர் மோடி உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்னர்.மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 294 இடங்களில் பாஜ 207 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான தகுதியை பெற்றது.

இதையடுத்து, பா.ஜ சட்டமன்றக் குழு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில், பாஜவின் மத்திய பார்வையாளராக அக்கட்சியின் மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவும், இணை பார்வையாளராக ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜியும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பாஜ சட்டமன்றக் குழு தலைவராக சுவேந்து அதிகாரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமித் ஷா இதனை அறிவித்தார். அப்போது பேசிய அமித் ஷா,’மேற்கு வங்க பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவராக சுவேந்து அதிகாரி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை நான் அறிவிக்கிறேன். மேற்கு வங்கத்தின் முதல் பாஜ முதல்வராக அவர் இருப்பார்’ என தெரிவித்தார். இதையடுத்து, சுவேந்து அதிகாரிக்கு கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து நேற்று மாலை ஆளுநர் ஆர். என். ரவியை சந்தித்து, மேற்குவங்கத்தில் பாஜ தலைமையிலான முதல் அரசை அமைப்பதற்கான உரிமையை கோரினார். அவருடன் மூத்த தலைவர்கள் திலீப் கோஷ், லாக்கெட் சட்டர்ஜி, தபஸ் ராய் உள்ளிட்டவர்கள் சென்றனர். இதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி அவரை புதிய முதல்வராக பதவி ஏற்க அழைத்தார். இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார்.

இந்த விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய அரசின் மூத்த அமைச்சர்கள் மற்றும் பாஜ ஆளும் மாநிலங்களின் சுமார் 20 முதலமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்கிறார்கள். கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்டமான விழாவில், சுவேந்து அதிகாரி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

* ‘அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்’

மேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள சுவேந்து அதிகாரி, பா.ஜ தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் என்றும், மக்களின் விருப்பங்களை ஈடேற்ற ஒன்றிய அரசுடன் இணைந்து செயல்படும் என்றும் தெரிவித்தார். அவர் பா.ஜ எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பேசும் போது,’அச்சம் வெளியேறிவிட்டது. பிரதமர் மோடி கூறியது போல, நம்பிக்கை உள்ளே வந்துவிட்டது. மேற்குவங்க மக்கள் எங்களுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர். மேற்குவங்கத்தில் பாஜவின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றுவோம்’ என்றார்.

Tags : Suvendu Adhikari ,West ,Bengal ,Chief Minister ,Modi ,Kolkata ,West Bengal ,West Bengal Assembly ,BJP ,
× RELATED நடிகரின் ரூ.30,000 கோடி சொத்து தகராறை...