×

சாகர்மாலா ஸ்டார்ட்அப் புத்தாக்க முன்முயற்சி ஐஐடி மெட்ராஸ், பம்பாய் மற்றும் ஐஎம்யு உடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

 

சென்னை, மே 7: இந்தியாவின் கடல்சார் துறைக்கு ஒரு கட்டமைக்கப்பட்ட புத்தாக்கச் சூழலமைப்பை உருவாக்குவதற்கும், கடல்சார் அம்ரித் கால் விஷன் 2047ன் இலக்குகளுக்கு ஏற்ப உள்நாட்டுப் புத்தாக்கத்தால் இயக்கப்படும் தற்சார்பு இந்தியாவான ‘ஆத்மநிர்பர் பாரத்’ என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்கும் ஒரு மைல்கல் நடவடிக்கை ஆகும். மரைடைம் இந்தியா பவுண்டேஷனின் நிர்வாக இயக்குநரும், சென்னை துறைமுக ஆணையத்தின் தலைவருமான விஸ்வநாதன் தலைமையில் சென்னை துறைமுக ஆணைய வளாகத்தில், ஐஐடி மெட்ராஸ், ஐஐடி பம்பாய் மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், சென்னை ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்நிகழ்ச்சியில் ஐ.ஐ.டி மெட்ராஸ் சார்பில், தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி துறைத் தலைவர் மனு சந்தானம், கடல்சார் பொறியியல் துறைத் தலைவர் பேராசிரியர் முரளி மற்றும் என்.டி.சி.பி.டபிள்யூ.சியின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் குமரன் ராஜு, ஐ.ஐ.டி பம்பாய் சார்பில், கடல்சார் பொறியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் மனசா ரஞ்சன் பெஹேரா மற்றும் பேராசிரியர் வி.கே. ஸ்ரீனேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் சார்பில், ஐஎஸ்.இ.ஏ.எஸ்ன் இணைத் தலைவர் டாக்டர் சத்ய நாராயண மூர்த்தி ஆலோசனை, பயிற்சி மற்றும் ஆராய்ச்சிப் பிரிவின் துணைப் பதிவாளர் (பொறுப்பு) டாக்டர் ஷிபு கே.எம் மற்றும் ஆலோசனை, பயிற்சி மற்றும் ஆராய்ச்சிப் பிரிவின் பயிற்சி ஆலோசகர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முறைப்படுத்தப்பட்டதன் மூலம், சாகர்மாலா ஸ்டார்ட்அப் புத்தாக்க முன்முயற்சித் திட்டம் இப்போது அதன் செயலாக்கக் கட்டத்திற்கு முன்னேறுகிறது. இதில், இந்தியக் கடல்சார் துறையில் உள்ள முக்கிய சவால்களை எதிர்கொள்ளும் 40 புத்தாக்கத் திட்டங்களில் பணியாற்றுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 36 ஸ்டார்ட்அப் நிறுவனங்களை கடல்சார் புத்தாக்க மையங்கள் இணைத்துக் கொண்டு, ஈடுபடுத்தி, வழிகாட்டும்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், சாகர்மாலா ஸ்டார்ட்அப் புத்தாக்க முன்முயற்சித் திட்டத்தின் கீழ் உள்ள கடல்சார் இந்தியா அறக்கட்டளையும் கடல்சார் புத்தாக்க மையங்களும், இந்தியக் கடல்சார் துறை தங்களின் நிஜ உலக செயல்பாட்டுச் சவால்களை ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு தளத்தை வழங்கும்.
இது, ஆத்மநிர்பர் பாரத் தொலைநோக்குப் பார்வை மற்றும் “மேக் இன் இந்தியா, மேக் பார் தி வேர்ல்ட்” என்ற தேசிய ஆணையின்படி உள்நாட்டுப் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதோடு, இத்துறையின் மாற்றம் மற்றும் நவீனமயமாக்கலை முன்னெடுத்துச் செல்லும் புதுமையான, மேம்பட்ட தொழில் நுட்பத் தீர்வுகளின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

Tags : Sagarmala Startup Innovation Initiative ,IIT Madras ,Bombay ,IMU ,Chennai ,SSI ,India ,Aatmanirbhar Bharat ,Maritime ,
× RELATED பயணிகளின் வசதிக்காக கூடுதல்...