×

கூடலூர் அருகே புலி தாக்கி பசுமாடு பலி

 

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த தேவர் சோலை எஸ்.எம்.காலனியில் வசிப்பவர் வாப்புட்டி. இவர் வளர்த்து வரும் பசுமாடு நேற்று சர்க்கார் மூலை குரும்பன் கொல்லி வயல் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றது. வழக்கம் போல் மாலை மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த வாப்புட்டி நேற்று மாலை சுமார் 5 மணியளவில் மேய்ச்சலுக்கு சென்ற பசுமாட்டை பார்க்க சென்றார். அப்போது அங்கு புலி தாக்கி கழுத்தில் காயத்துடன் பசுமாடு இறந்து கிடந்தது. அருகே புலியின் கால்தடம் பதிவாகி இருந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் பார்வையிட்டு விசாரித்தனர்.

கடந்த 2 தினங்களுக்கு முன் முறம் பிலாவு பகுதியில் பசுமாட்டை புலி தாக்கி இறந்த நிலையில், அதே பகுதியை ஒட்டிய சர்க்கார் மூலை பகுதியில் மீண்டும் புலி தாக்கி பசுமாடு இறந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தேவர் சோலை சுற்றுவட்ட பகுதிகளில் கடந்த பல மாதங்களாக கால்நடைகளை தாக்கும் புலி ஒன்று நடமாடி வருகிறது. இதுவரை சுமார் 40க்கும் மேற்பட்ட கால்நடைகள் புலி தாக்கி இறந்துள்ளன.

கால்நடைகளை தாக்கும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், வனத்துறையினர் பல இடங்களில் கூண்டு வைத்தும் புலி கூண்டில் சிக்காமல் கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. பலியான கால்நடைகளுக்கு வனத்துறை இழப்பீடு வழங்கியபோதும், கால்நடை வளர்ப்போர் அச்சத்திலேயே தங்களது கால்நடைகளை வளர்க்கும் நிலை உருவாகி உள்ளது.

Tags : Gudalur ,Vapputty ,Thevar Solai SM Colony ,Nilgiris district ,Kurumban Kolli ,Sarkar Mooya ,
× RELATED கொளுத்தும் கோடை வெயில் வீடுகளுக்குள்...