×

தவெக தலைவர் விஜய்க்கு திரையுலகினர் வாழ்த்து

சென்னை: திரையுகை சேர்ந்த பலர் தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர். நடிகரும், எம்பியுமான கமல்ஹாசன் வெளியிட்ட வாழ்த்து பதிவில், ‘‘உங்கள் முதல் தேர்தலிலேயே மக்களுடைய நம்பிக்கையை பெற்று பெருவெற்றி பெற்றிருக்கும் தவெக தலைவர் விஜய்க்கும், அவரது கட்சியினருக்கும் எனது பாராட்டுகள். மக்கள் பணி சிறக்க எனது வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.

விக்ரம் தனது சோஷியல் மீடியா பதிவில், ‘‘வாழ்த்துக்கள் நண்பா, நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள்’’ என்று பதிவிட்டுள்ளார். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‘‘தவெகவிற்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள். அன்புள்ள விஜய்க்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராக நீங்கள் உயர, வளர வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன், ‘‘போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இந்த வெற்றியை பெற்றிருக்கும் விஜய்க்கு வாழ்த்துகள்’’ என்று பதிவிட்டுள்ளார். சூர்யாவின் பதிவில், ‘‘நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ள அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்’’ என்று கூறியுள்ளார்.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘‘முதல் தேர்தலில் உங்களுக்கு கிடைத்துள்ள இந்த தகுதியான வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்’’ என்று தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமார் தொலைபேசி வாயிலாக விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ‘பெரும் வெற்றி பெற்ற விஜய்க்கும், அவர் கட்சியினருக்கும் எனது வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ், ‘களத்திற்கு வந்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டு மக்களின் பெரும் ஆதரவையும் அன்பையும் பெற்று ஆட்சி அமைக்க இருக்கும் விஜய்க்கும், தவெகவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார்.

Tags : T.V.A. ,Vijay ,Chennai ,Kamal Haasan ,
× RELATED சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற...