ஐதராபாத்: ‘வீர சிம்ஹா ரெட்டி’, ‘பகவந்த் கேசரி’, ‘டாக்கு மகாராஜ்’, ‘அகண்டா 2: தாண்டவம்’ ஆகிய படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு பாலகிருஷ்ணா தனது 111வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். கோபிசந்த் மல்லேனி இயக்கும் இப்படத்தை விரிந்தி சினிமாஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. முதலில் வரலாற்று படமாக உருவாக இருந்த இப்படம் அதிக பொருட்செலவு காரணமாக வேறு கதைக்களத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதில் நயன்தாரா ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அவரது அதிக சம்பளம் மற்றும் கால்ஷீட் பிரச்னையால் தற்போது வேறு ஹீரோயினுக்கு படக்குழு மாறியுள்ளது. அதன்படி காஜல் அகர்வால் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்திற்கு பிறகு கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் காஜல் அகர்வால் 65 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்கிறார். முன்னதாக பாலகிருஷ்ணா ஜோடியாக ‘பகவந்த் கேசரி’ என்ற படத்தில் அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
