×

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வெள்ளிங்கிரி மலையேறிய திருச்சி பக்தர் மர்மச்சாவு: 3 மாதத்தில் 7 பேர் பலி

தொண்டாமுத்தூர்: கோவை மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூண்டியில் கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் வெள்ளிங்கிரி மலை உள்ளது. சுமார் 5.5 கிலோ மீட்டர் தூரம் செல்லும் மலை பாதையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்றவையை கடந்து சென்றால் 7வது மலையில் சுயம்பு லிங்கத்தை தரிசிக்க முடியும்.

கரடுமுரடான இந்த மலை பாதையில் பக்தர்களுக்கு மலை ஏற பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் மலையேறி சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையலில் சித்ரா பவுர்ணமி நாளான மே 1ம் தேதி இரவு முதல் ஏராளமான பக்தர்கள் மலையேறி கொண்டிருந்தனர்.

இந்நிலையில் 2ம் தேதி அதிகாலை 7வது மலையில் சாமி தரிசனம் செய்ய வந்த 35 வயது மதிக்கதக்க பக்தர் ஒருவர் சுயநினைவின்றி இருப்பதாக வனபணியாளர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவர்கள், சம்பவ இடத்திற்கு சென்று மருத்துவர் உதவியுடன் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரது உடலை டோலி மூலம் அடிவாரத்திற்கு கொண்டு வந்தனர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டதில் இறந்த பக்தர் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த குமாரவேலு(38) என்பது தெரியவந்தது. இந்தாண்டு மலையேற்ற அனுமதி வழங்கப்பட்ட பிப்ரவரி முதல் தற்போது வரை 3 மாதத்தில் 7 பக்தர்கள் உயிரிழந்துள்ளதாக வனத்துறையினர் கூறினர்.

Tags : Vellingiri hill ,Chitra Pournami ,Thondamuthur ,Poondi ,Western Ghats of Coimbatore ,White Vinayagar Temple ,Pampatti Sunai ,Kaitati… ,
× RELATED கடும் சிரமத்திலும் நன்மைகள் இருக்கு...