×

நாகர்கோவிலில் வீடு அபகரிப்பு அதிமுக மாநில மகளிரணி நிர்வாகி மீது சிபிசிஐடி வழக்கு

நாகர்கோவில் : நாகர்கோவிலில் வீடு அபகரிப்பு தொடர்பாக அதிமுக மாநில மகளிரணி நிர்வாகி மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குமரி மாவட்டம் எஸ்.டி. மங்காடு அடுத்த அதங்கோடு கொயிக்கதரையை சேர்ந்தவர் ராஜேஷ் (42). இவர் நேசமணிநகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்திருந்தார். அதில், எனது பெரியப்பா மகன் சுரேஷ் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். அவருக்கு சொந்தமான நாகர்கோவில் நேசமணிநகர் பகுதியில் 66 சென்ட் நிலமும், அதில் வீடும் உள்ளது.

அதில் கடந்த 2022 முதல் அதிமுக மாநில மகளிரணி துணை செயலாளரான ராணி என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு குடி வந்தார். அதன் பிறகு அவர், எனது அண்ணனுக்கு வாடகை எதுவும் கொடுக்காமல் அந்த வீட்டை அபகரிக்கும் எண்ணத்தில் செயல்பட்டதால், அந்த இடத்துக்கு அண்ணன் எனக்கு பவர் கொடுத்தார். அதன் பிறகு நான் அவர்களிடம் சென்று வீட்டை காலி செய்ய கூறிய போது என்னிடம் தகராறு செய்தார்கள்.

கடந்த 9.7.2025 அன்று நானும், சாமுவேல், அனிஷ் என்பவரும் சேர்ந்து ராணியிடம் சென்று அக்ரிமெண்ட் முடிந்தும் வீட்டில் எப்படி இருப்பீர்கள் என்று கேட்டதற்கு, எங்களை அவதூறாக பேசி போலி ஆவணங்களை காட்டி மிரட்டி தாக்கினர். எனவே சட்டவிரோதமாக அத்துமீறி நுழைந்து தகாத வார்த்தைகளால் எங்களை பேசி தாக்கிய ராணி உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். இந்த புகாரின் பேரில் ராணி உள்ளிட்டவர்கள் மீது, நேசமணிநகர் காவல் நிலையத்தில் 29.7.2025 அன்று வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இந்த பிரச்னை தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ராணி உள்ளிட்டவர்கள் மனு தாக்கல் செய்து, வழக்கு விசாரணையை வேறு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என கூறி இருந்தனர். வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கின் உண்மை தன்மையை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். நாகர்கோவில் சிபிசிஐடி போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் திடீர் திருப்பமாக தற்போது ராணி மற்றும் உடையார்விளையை சேர்ந்த சதீஷ் ஆகியோர் மீது ஏற்கனவே நேசமணிநகர் போலீசார் பதிவு செய்து இருந்த வழக்கின் அடிப்படையில் ஆவணங்களை பெற்று நேற்று முன்தினம் நாகர்கோவில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு மற்றும் உயர் அதிகாரிகளிடம் இருந்து கிடைக்க பெற்ற ஆணைகளின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் கூறினர்.

பி.என்.எஸ். பிரிவு 296 (பி) (ஆபாசமாக பேசுதல்), 115(2) (காயப்படுத்துதல்), 324 (2) (சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்), 329 (4) (வீடு அத்துமீறல்), 351 (2) (மிரட்டி அச்சத்தை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ராணி மீது புகார் அளித்த தரப்பினர் கூறுகையில், நீதிமன்றத்தை நாடி இந்த வழக்கை ராணி திசை திருப்ப முயன்றார். ஆனால் அவரது மனுவின் அடிப்படையிலேயே சிபிசிஐடி போலீசார் விசாரித்து, உண்மை தன்மை கண்டறிந்து அவர் மீதே வழக்கு பதிவு செய்துள்ளனர் என்றனர்.

Tags : CBCID ,AIADMK ,Nagercoil ,CBCID police ,Kumari district ,ST. Rajesh ,Koikkadharai ,Mangadu ,Nesamani Nagar ,
× RELATED கடும் சிரமத்திலும் நன்மைகள் இருக்கு...