தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்த சூறைக்காற்றால், தூத்துக்குடி ஸ்பிக்நகர் அருகிலுள்ள அத்திமரப்பட்டியில் 5,000க்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து சேதமானது. நேற்று காலை வாழைத் தோட்டங்களுக்கு சென்ற விவசாயிகள், வாழைகள் முறிந்து சாய்ந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், போதுமான தண்ணீர் இல்லாத காரணத்தால் வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு மிகுந்த சிரமப்பட்டோம். ஓராண்டு முழுவதும் உழைத்த உழைப்பு, தற்போது சூறைக்காற்றால் வீணாகி விட்டது. வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்துள்ளோம். எனவே சேதத்தை கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
* வாகனக் காப்பக கூரை சரிந்து 12 கார்கள் சேதம்
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. அருப்புக்கோட்டையில் சூறாவளி காற்றுடன் மிதமான அளவில் மழை பெய்தது. அப்போது, பல இடங்களில் குடிசைகள், தகர ஷெட்டுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. அருப்புக்கோட்டை அருகே காந்திநகர் சர்வீஸ் சாலையில் தனியார் வாகன காப்பக மேற்கூரை சரிந்து விழுந்ததில், 12 கார்கள் சேதமடைந்தன. இதில் பல கார்களின் கண்ணாடிகள், மேற்கூரை சேதமடைந்தன. இதேபோல, காரியாபட்டியில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததில் பல இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்து வீடுகள் சேதமடைந்தன.
