×

தொடர் விடுமுறையையொட்டி வடநெம்மேலி முதலை பண்ணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சென்னை: மாமல்லபுரம் அடுத்த, வடநெம்மேலி முதலை பண்ணையில் முதலைகளுக்கு உணவு வழங்குவதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையையொட்டி முதலை பண்ணை இயங்கி வருகிறது. இங்கு நாட்டில் உள்ள பல்வேறு முதலை வகைகளான அமெரிக்காவில் உள்ள அலிகேட்டர், உப்பு நீரில் வாழும் முதலைகள் உள்ளிட்ட அரியவகை முதலைகள் குளத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், அமேசான் மற்றும் ஆப்பிக்க காடுகளில் உள்ள நீர் நிலைகளில் வாழ்ந்து, மனிதர்களை அப்படியே விழுங்கும் மிகப்பெரிய ராட்சத முதலைகளும் இங்குள்ளன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு தொடர் கோடை விடுமுறையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நேற்று காலை முதல் மாலை வரை குடும்பம், குடும்பமாக முதலை பண்ணையில் குவிந்தனர். முன்னதாக, நுழைவு கட்டணம் செலுத்திய பின்னர் முதலைகளை சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அப்போது, முதலை பண்ணை ஊழியர்கள் முதலைகள், பச்சை ஓணான்கள், மலைபாம்புகளுக்கு உணவு அளிப்பதை சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து, முதலைகள் வெளியே வராமல் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலிகள் அருகே நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ச்சி அடைந்ததை காணமுடிந்தது.

மேலும், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வடநெம்மேலியில் குவிந்ததால், முதலை பண்ணை வளாகம் களைகட்டி காணப்பட்டது.பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், ஏராளமானோர் முதலை பண்ணையில் குவிந்து வருகின்றனர். இதனால், கோவளம் வரை இயக்கப்படும் அனைத்து மாநகர பேருந்துகளையும் மே 31ம் தேதி வரை வடநெம்மேலி முதலை பண்ணை வரை இயக்க மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Vadanemmeli Crocodile ,Farm ,Chennai ,Vadanemmeli Crocodile Farm ,Mamallapuram ,Vadanemmeli East Coast Road ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய...