×

ஈரானில் `போரும் இல்லை, அமைதியும் இல்லை’: ஈரான் உச்சத் தலைவரின் பிரதிநிதி தகவல்

பெங்களூரு: ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நிலவிவரும் பதற்றமான சூழலை ‘போரும் இல்லை அமைதியும் இல்லை’ என்ற நிலை உள்ளது என்று இந்தியாவில் உள்ள ஈரானின் உயர்மட்டத் தலைவரின் பிரதிநிதி அப்துல் மஜீத் ஹக்கீம் இலாஹி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் இதுதொடர்பாக பேசிய அவர், ‘இந்த மோதலை உடனடியாக நிறுத்த வேண்டும். உலகளாவிய ஸ்திரத்தன்மை என்பது இந்தப் போரைத் தொடங்கியவர்களின் கைகளில் தான் உள்ளது.

போரினால் பாதிக்கப்பட்டு, எரிசக்தி நெருக்கடியால் அவதிப்படும் நாடுகள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை? ஈரான் இந்த மோதலை விரும்பவில்லை. பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு மத்தியில்தான் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஈரானுக்கு ஏற்பட்டது. ஈரான் மீது போர் திணிக்கப்பட்டது. பலமுறை ஈரான் இந்தப் போரை தவிர்க்க முயன்றது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நிலைப்பாடு என்னவென்று எனக்குத் தெரியவில்லை. தாங்கள் விரும்புவதை மற்ற நாடுகளின் மீது அவர்கள் திணிக்க நினைக்கிறார்கள். அவர்களுக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது? இழப்புகள் ஏற்பட்டபோதிலும், நிபந்தனையற்ற சரண் என்ற கோரிக்கையை ஈரான் நிராகரித்து உறுதியுடன் நின்று தன்னைத் தற்காத்துக் கொண்டுள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும், ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும் என்று விரும்பினர். அதை யாராலும் ஏற்க முடியாது. நாங்கள் தியாகம் செய்யத் தயார். ஆனால் அடிபணியத் தயாராக இல்லை. 40 நாட்கள் மோதலுக்குப் பிறகு அவர்களால் தங்களது எந்த நோக்கத்தையும் அடைய முடியாது என்பதை உணர்ந்த பின்னரே தற்போதைய போர் நிறுத்தத்தை முன்மொழிந்தனர். இந்த போர்நிறுத்தம் உண்மையான போர்நிறுத்தம் அல்ல.

இது போரும் இல்லை; அமைதியும் இல்லை என்ற சூழல். ஈரானில் நிலைமை சீராக உள்ளது. மக்கள் தங்களின் அன்றாட பணிகளைத் தொடர்கின்றனர். மக்கள் விவசாயம் செய்கிறார்கள். வேலைகளுக்குச் செல்கிறார்கள். எதற்கும் பயப்படாமல் தங்களைத் தற்காத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். பல நாடுகளைப் பாதித்துள்ள இந்த பிரச்னை அமெரிக்காவால் உருவாக்கப்பட்டது’ என்றார்.

Tags : Iran ,Supreme Leader ,Bengaluru ,US ,Israel ,Abdul Majeed Hakim Elahi ,Supreme ,India ,
× RELATED ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி...