திருவனந்தபுரம்: கேரளத்தில் நாளை 43 இடங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 15 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கேரளத்தில் 140 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த மாதம் 9ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 79.63 சதவீத வாக்குகள் பதிவாயின. இது கடந்த தேர்தலை விட 3 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
இந்த தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் ஆளும் இடதுசாரி மற்றும் காங்கிரஸ், பாஜ கூட்டணி கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. முதல்வர் பினராயி விஜயன் தொடர்ந்து 3வது முறையாக கண்ணூர் மாவட்டம் தர்மடம் தொகுதியிலும், எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் கடந்த முறை வெற்றி பெற்ற பரவூர் தொகுதியிலும், பாஜ மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் நேமம் தொகுதியிலும் போட்டியிட்டனர்.
தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 140 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை நாளை 43 இடங்களில் நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் பணியில் மொத்தம் 15,465 ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.
அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும். காலை 8.30 மணிக்குப் பிறகு முதல் கட்ட நிலவரங்கள் வெளிவரும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு 25 கம்பெனி மத்திய போலீஸ் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
* கோழிக்கோட்டில் 144 தடை உத்தரவு
கடந்த சில தினங்களுக்கு முன் கோழிக்கோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாஜ, காங்கிரஸ் மற்றும் சிபிஎம் தொண்டர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் சினேகில் குமார் சிங் உத்தரவிட்டுள்ளார். மேலும் நாளை பட்டாசு விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
