×

மேற்கு வங்க வாக்கு எண்ணிக்கையில் ஒன்றிய அரசு அதிகாரிகள் நியமனம்; நாங்கள் தலையிட விரும்பவில்லை: முந்தைய சுற்றறிக்கையை அமல்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் கடந்த மாதம் 23ம் தேதி முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கும், இதைத்தொடர்ந்து 29ம் தேதி 142 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாகவும் சட்டபேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதுபோன்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஒன்றிய அரசு ஊழியர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முன்னதாக உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையடுத்து இந்த நடவடிக்கைக்கு எதிராக ஆளும் அரசான திரிணாமுல் காங்கிரஸ் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், ”வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்களாக ஒன்றிய அல்லது மாநில அரசு அதிகாரிகளை நியமிப்பது என்பது தேர்தல் ஆணையத்தின் தனிப்பட்ட அதிகாரம் அதில் தலையிட முடியாது என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்திருந்தது.

இதை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதிகளான பி.எஸ்.நரசிம்மா மற்றும் ஜாய்மால்யா பாக்‌ஷி ஆகியோர் அமர்வில் நேற்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘‘ஒன்றிய அரசு அதிகாரிகளை மட்டும் தான் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியமர்த்த வேண்டும் என்று சுற்றறிக்கை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, தலைமை தேர்தல் ஆணையத்தின் தரப்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயம் எங்களுக்கு ஏப்ரல் 29 அன்று தான் தெரியவந்தது. ஆனால் எங்களுக்கு தகவல் தெரிவிக்கும் முன்னதாகவே முன்கூட்டியே அதிகாரிகளுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டு விட்டது. மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பிரச்சினை ஏற்படும் என்ற அச்சம் இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இது உன்மைக்கு புறம்பானதாகும். மேலும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஒரு ஒன்றிய அரசுப் பிரதிநிதி ஏற்கனவே இருக்கிறார். ஆனால் இப்போது கூடுதலாக மேலும் ஒரு ஒன்றிய அரசு அதிகாரியை நியமிக்க தேர்தல் ஆணையம் விரும்புகிறது.

மாநில அரசின் பிரதிநிதியை தவிர்க்கும் விதமாக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு உள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு தான் எங்களது தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் ஆணையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் சட்டப்பிரிவு 324க்கு எதிரானதாகும். எனவே உச்ச நீதிமன்றம் இதனை கருத்தில் கொள்ள வேண்டும். அதேப்போன்று வாக்கு எண்ணிக்கையின் போது பதிவாகும் சிசிடிவி பதிவுகளை பாதுகாத்து வைக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜாய்மால்யா பாக்‌ஷி,‘‘அப்படியானால், வாக்கு எண்ணும் உதவியாளர், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர் மற்றும் நுண்கண்காணிப்பாளர் ஆகியோரும் ஒன்றிய அரசு அதிகாரிகள் தான். அவர்களில் ஒருவர் ஒன்றிய அரசு அதிகாரி என்பதால் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு விதிமுறைகளுக்கு முரணானது என்று நாம் கருத முடியாது என்று விளக்கமளித்தார்.

அப்போது தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.எஸ்.நாயுடு, ‘‘மாவட்டத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக செயல்படுபவர் மாநில அரசின் ஊழியர் தானே, அப்படி இருக்கையில் வேண்டுமென்றே இந்த விவகாரத்தில் சர்ச்சையை கிளப்புகின்றனர். குறிப்பாக வாக்கு எண்ணிக்கை நடக்கும்போது பதிவு செய்யப்படும் சிசிடிவி காட்சிகள் அனைத்தும் 45 நாட்களுக்கு பாதுகாத்து வைக்கப்படும். எனவே இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

குறிப்பாக முந்தைய சுற்றறிக்கையை அமல்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம் என்று கூறினார். இதையடுத்து வாதங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு ஊழியர்கள் மேற்பார்வையாளராக நியமிக்கப்படுகிறார்களோ அல்லது மாநில அரசு மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்படுகிறார்களோ என்பது இல்லை. மாறாக தேர்தல் ஆணையத்தின் திருப்தியே இந்த விவகாரத்தில் கருத்தில் எடுத்துக் கொள்ள முடியும். ஏனெனில் தேர்தல் ஆணையத்திடம் தான் அனைத்து கட்டுப்பாடுகளும் உள்ளது.

குறிப்பாக தேர்தல் ஆணையம் முந்தைய சுற்றறிக்கையை அமல்படுத்துகிறோம் என்று கூறியதை அடிப்படையாக கொண்டு தற்போது உத்தரவை பிறப்பிக்கிறோம். அதில், ‘‘இந்த விவகாரத்தில் கடந்த 29ம் தேதி தேர்தல் அதிகாரியின் சுற்றறிக்கையில் குறிப்பிட்டு இருப்பது போல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்பார்வையாளர் அல்லது இணை மேற்பார்வையாளர் மாநில அரசு ஊழியர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பதை ஆணையம் உறுதி செய்ய வேண்டும். அதேப்போன்று சுற்றறிக்கையில் கூறப்பட்டிருக்கும் அனைத்தையும் அமல்படுத்த வேண்டும்.

மேலும் தற்போதைய இந்த மேல்முறையீட்டு மனு மீது கூடுதலாக எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவோ அல்லது தேர்தல் ஆணையத்தின் விவகாரத்தில் நாங்கள் தலையிடவோ விரும்பவில்லை. அதற்கான அவசியமும் தற்போது இல்லை. எனவே இதில் முன்னதாக கூறியது போன்று தேர்தல் ஆணையம் தன்னுடைய சுற்றறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ள விஷயத்தை அமல்படுத்த வேண்டும் என்று மட்டுமே உத்தரவிடுகிறோம் என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், திரிணமுல் காங்கிரஸ் கட்சி தரப்பில் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தனர்.

* கூடுதல் பார்வையாளர்களை நியமித்தது தேர்தல் கமிஷன்
மேற்கு வங்கத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி, கூடுதலாக 165 வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களையும், 77 காவல்துறை பார்வையாளர்களையும் தேர்தல் ஆணையம் நேற்று நியமித்துள்ளது. ஏற்கனவே தொகுதிக்கு ஒருவர் என 294 வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு வாக்கு எண்ணும் பணியில் புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் உதவியாக இருப்பார்கள் என்றும், கூடுதல் காவல் பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வெளியே சட்டம் ஒழுங்கு ஏற்பாடுகளை கண்காணித்து வலுப்படுத்துவார்கள் என்றும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.

* திரிணாமுல் காங்கிரஸ், பாஜ கட்சிகள் வரவேற்பு
உச்ச நீதிமன்ற உத்தரவை பாஜ, திரிணாமுல் காங்கிரஸ் இரு கட்சிகளும் வரவேற்றுள்ளன. பாஜ சமூக ஊடக பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது பதிவில், ‘‘வாக்கு எண்ணிக்கை செயல்முறையின் நேர்மை மீது செல்வாக்கு செலுத்தவோ அல்லது சந்தேகம் எழுப்பவோ செய்யப்படும் முயற்சிகளுக்கு எளிதில் அங்கீகாரம் கிடைக்காது. மம்தாவுக்கு மற்றொரு நீதிமன்ற நிராகரிப்பு’’ என்றார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அறிக்கையில், ‘வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்களின் நியமனம் தொடர்பான கடந்த 13ம் தேதி வெளியிட்ட ஆணையம் அறிக்கையின்படி ஒன்றிய, மாநில அரசு ஊழியர்களை சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் எங்கள் நிலைப்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளின்படி, வாக்கு எண்ணிக்கை நியாயமான, வெளிப்படையான, சமநிலையான முறையில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என கூறப்பட்டுள்ளது.

Tags : Union government ,West Bengal ,Supreme Court ,Election Commission ,New Delhi ,
× RELATED வணிக சிலிண்டரை தொடர்ந்து பெட்ரோல்,...