மும்பையில் பிரியாணி மற்றும் தர்பூசணி சாப்பிட்ட விவகாரம்; இறந்த 4 பேரின் இதயம் மூளை பச்சையாக மாறியது: தடயவியல் அறிக்கையில் திடுக் தகவல்கள்

மும்பை: மும்பையில் பிரியாணி மற்றும் தர்பூசணி சாப்பிட்ட சம்பவத்தில் இறந்த 4 பேரின் இதயம், மூளை பச்சையாக மாறியுள்ளதாக தடயவியல் அறிக்கையில் திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனால் அவர்கள், விஷம் வைத்து கொல்லப்பட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

மும்பையில் பிரியாணியும் தர்பூசணியும் சாப்பிட்டதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இதற்கான பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர்களது உடம்பில் ஒரு விஷம் இருந்தது கண்டறியப்பட்டது. மும்பையில் வசித்து வந்தவர் அப்துல்லா டோகாடியா (45). மொபைல் உதிரிபாகங்கள் விற்பனையாளர். இவரது மனைவி நஸ்ரின் (35), மகள்கள் ஸைனப் (13), ஆயிஷா (16). இவர்கள், தங்களது வீட்டில் உறவினர்களுக்கு மட்டன் பிரியாணி விருந்து அளித்துள்ளனர். அனைவரும் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு திரும்பினர். பின்னர், நள்ளிரவு 1 மணியளவில் அப்துல்லா குடும்பத்தினர், தர்பூசணி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிகாலை 5 மணியளவில், 4 பேருக்கும் கடுமையான வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவ சிகிச்சை அளித்தும் பலனின்றி அடுத்த சில மணிநேரங்களிலேயே 4 பேரும் உயிரிழந்தனர்.

ஆரம்பத்தில் அசுத்தமான தர்பூசணியால் ஏற்பட்ட \”உணவு விஷப்பாதிப்பு\” என நம்பப்பட்டது.
மருத்துவர்களும் சோதனை நடத்தியதில், பிரியாணியால் பிரச்னை இல்லை, அப்துல்லா குடும்பத்தினருடன் சாப்பிட்ட உறவினர்கள் நலமாக இருக்கிறார்கள்’ என்றனர். இதனால் தர்பூசணி பழத்தின் மீது சந்தேகம் எழுந்தது. மேலும், உயிரிழந்தவர்களின் மூளை, இதயம் மற்றும் குடல் பகுதிகளில் அசாதாரணமான பச்சை நிறத்தன்மை கண்டறியப்பட்டுள்ளது. இது சாதாரண உணவு நஞ்சாவதால் ஏற்படும் அறிகுறி அல்ல என மருத்துவர்கள் கருதுகின்றனர். அப்துல்லா டோகாடியாவின் உடலில், வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் மிக வீரியமான ‘மார்பின்’ மருந்தின் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தர்பூசணியை விட, ஏதோ ஒரு வகை விஷம் அல்லது வேதிப்பொருள் உடலில் கலந்ததே மரணத்திற்கு நேரடி காரணமாக இருக்கலாம் என தடயவியல் சோதனைகள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் குறித்து மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எப்டிஏ) மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழப்புகளுக்கும் தர்பூசணிக்கும் நேரடி தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என எப்டிஏ தெரிவித்துள்ளது. இருப்பினும், தர்பூசணியில் நச்சுப் பொருட்கள் ஏதேனும் கலக்கப்பட்டிருந்ததா என்பதை அறிய மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பிரியாணி சாப்பிட்ட உறவினர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதால் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். இது தற்கொலையா, திட்டமிட்ட கொலையா அல்லது தற்செயலாக நடந்த விபத்தா என்ற கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. இந்த செய்தியால் மும்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தர்பூசணி விற்பனை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. எனினும், இறுதி வேதியியல் பகுப்பாய்வு முடிவுகள் வந்த பின்னரே, உண்மையான காரணம் தெரியவரும்.

Related Stories: