×

இந்த வார விசேஷங்கள்

2.5.2026 – சனி கள்ளழகர் ராமராயர் மண்டபத்தில் தசாவதாரக் காட்சி

சித்ரா பௌர்ணமி அன்று, வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்குப் பரவசமாய்க் காட்சி தந்த அழகர் பெருமான் அங்கிருந்து புறப்பட்டு ராமராயர் மண்டபத்திற்கு வருவார். இங்குதான் பிரசித்தி பெற்ற தசாவதார காட்சி வைபவம் நடைபெறும். சித்ரா பௌர்ணமிக்கு அடுத்த நாள் இரவு (பெரும் பாலும் விடிய விடிய), அழகர் ஒவ்வொன்றாக பத்து அவதாரங் களை எடுத்து பக்தர்களுக்குக் காட்சி அளிப்பார். ஒவ்வொரு அவதாரத்திற்கும் தனித்தனி அலங்காரங்கள் மற்றும் பூஜைகள் உண்டு. அழகர் பின்வரும் வரிசையில் கோலம் பூணுவார்:
1. மச்ச அவதாரம் (மீன்)
2. கூர்ம அவதாரம் (ஆமை)
3. வராக அவதாரம் (பன்றி)
4. நரசிம்ம அவதாரம் (சிங்கம்-மனிதன்)
5. வாமன அவதாரம் (குள்ள வடிவம்)
6. பரசுராம அவதாரம்
7. ராம அவதாரம்
8. பலராம அவதாரம்
9. கிருஷ்ண அவதாரம்
10. மோகினி அவதாரம்

இதில் மோகினி அவதாரம் மிக விசேஷமானது.

காலையில் அங்கிருந்து அனந்த ராயர் பல்லக்கில் (திருமலை நாயக்கரின் திவானால் செய்து கொடுக்கப்பட்ட இது முழுக்கத் தந்தத்தால் இழைக்கப்பட்டது) தல்லாகுளத்திலுள்ள சேதுபதிராஜா மண்டபம் வரைக்கும் வருவார். அன்றிரவு அங்கு அழகருக்கு அலங்காரம் கலைக்கப்பட்டு பூப்பல்லக்கில் ஜோடனை நடக்கும்.

2.5.2026 – சனி சோளசிம்மபுரம் – லட்சுமி நாராயணன் விடையாற்றி உற்சவம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் (சோழசிம்மபுரம்) அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். யோக நரசிம்ம பெருமாள் மலை மீது வீற்றிருக்கும் இத்தலம், 1305 படிக்கட்டுகளைக் கொண்டது. மலைக்கோவிலில் யோக நரசிம்மரும், சிறிய மலையில் யோக ஆஞ்சநேயரும் அருள் பாலிக்கின்றனர். இது கடிகாசலம் என்றும் அழைக்கப்படுகிறது. சித்திரை பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறும். பிரம்மோற்ச வத்தின் பகுதியாக விடையாற்றி உற்சவம் சிறப்பாக நடை பெறும்.உற்சவத்தின்போது சுவாமி புறப்பாடு, சிறப்பு அலங்காரம், திருமஞ்சனம் மற்றும் விடையாற்றி விளையாட்டு நடைபெறும். விடையாற்றி உற்சவம் 3 நாட்கள் நடைபெறும்.

3.5.2026 – ஞாயிறு மைசூர் மண்டபத்தில் கள்ளர் திருக்கோலத்தில் கள்ளழகர் புஷ்ப பல்லக்கில் பவனி

வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர், வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு மோட்சம் அளித்து, ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் காட்டிய பின், கள்ளர் திருக்கோலத்தை (வேடர் கோலம்) ஏற்றுக்கொள்கிறார். கள்ளர் திருக்கோலத்தில், கள்ளழகர் அனந்தராயர் பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டு, ராமராயர் மண்டபத்தில் இருந்து மைசூர் வீர மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். மைசூர் மண்டபத்தில் இருந்து அழகர் மலைக்கு புறப்படும் முன், அவர் புஷ்ப பல்லக்கில் (பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு) பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளிக் கிறார்.

4.5.2026 – திங்கள் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

இன்று முதல் அக்னி நட்சத்திரம் (கத்தரி வெயில்) துவங்குகிறது. அக்னி நட்சத்திரம் என்பது ஆண்டுதோறும் சித்திரை மாத இறுதியில் (ஏப்ரல் – மே) சூரியன் பரணி நட்சத்திரத்தின் 3-ம் பாதத்தில் தொடங்கி கார்த்திகை நட்சத்திரம் முழுவதும் வலம் வரும் மிக வெப்பமான காலமாகும். இந்த காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும்.அக்னி நட்சத்திரத்தை முன் 7 நாட்கள், பின் 7 நாட்கள் எனப் பிரிப்பர். இது மிக கடுமையான காலம். சிவபெருமானுக்கு ‘தாரா பாத்திரம்’ மூலம் நீர் சொட்டுச் சொட்டாக விழுமாறு ஏற்பாடு செய்வது அல்லது லிங்கத்திற்கு இளநீர் மற்றும் பன்னீர் அபிஷேகம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். வெப்பத்தைத் தணிக்கும் தெய்வங்களான மாரியம்மன் (அம்மன் வழிபாடுகள்), ஐயப்பன் மற்றும் முருகப் பெருமானுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்து வழிபடலாம்.

இந்த காலத்தில் தானம் செய்வது மிகச் சிறந்தது. குறிப்பாக:

1.நீர் பந்தல்: தாகத்தில் இருப்பவர்களுக்குத் தண்ணீர், மோர், பானகம் தானம் செய்வது.
2.விசிறி தானம்: தேவையுள்ளவர்களுக்கு விசிறி அல்லது குடை வழங்குவது.
3.காலணி தானம்: வெறும் காலில் நடப்பவர்களுக்குச் செருப்பு வாங்கித் தருவது.

காயத்ரி மந்திரம் மற்றும் ஆதித்ய ஹிருதயம் போன்ற சூரிய வழிபாட்டு மந்திரங்களை அதிகாலையில் சொல்வது உடல் மற்றும் மனவலிமையை அதிகரிக்கும்.சாஸ்திரப்படி, இந்த 21 நாட்களும் ஏழை எளியவர்களுக்கு அல்லது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தயிர்சாதம் அல்லது பானகம் வழங்குவது பித்ருக்களின் ஆசியையும், தெய்வஅருளையும் பெற்றுத்தரும் என்பது நம்பிக்கை.பொதுவாக கத்தரி வெயிலில் புதிய முயற்சிகள், வீடு மாறுதல் போன்றவற்றைத் தவிர்ப்பர், ஆனால், திருமண நிச்சயம் போன்ற மங்கல காரியங்களைச் செய்யலாம் எனச் சில ஜோதிடக் கருத்துக்கள் உள்ளன.

4.5.2026 – திங்கள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் உற்சவம்

சென்னை திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவப் பெருவிழா ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி ஆரம்பித்து, மே மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் காலையில் திருமஞ்சனம், பல்வேறு வாகனங்களில் வாகன வீதி உலா கண்டருள்வார். இன்றைய தினம் காலை சூரிய பிரபை வாகனத்திலும், மாலையில் சந்திரபிரபை வாகனத்திலும் பகவான் வீதி உலா கண்டருளுகிறார். ஆறாம் தேதி சூர்ணாபிஷேகம் நடைபெறுகிறது. ஏழாம் தேதி மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தேர் உற்சவம் நடைபெற இருக்கிறது.

5.5.2026 – செவ்வாய் சங்கடஹர சதுர்த்தி

சங்கடஹர சதுர்த்தி என்பது ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்து வரும் தேய்பிறை சதுர்த்தி திதியில் கொண்டாடப்படும் விநாயகர் வழிபாட்டு நாளாகும். ‘‘சங்கடம்” என்றால் துன்பம், ‘‘ஹர” என்றால் அழித்தல் என்று பொருள். இந்த நாளில் விரதமிருந்து விநாயகரை வழிபட்டால் கடன், நோய் மற்றும் எதிரிகள் தொல்லை நீங்கி, கஷ்டங்கள் தீர்ந்து, வேண்டிய வரங்கள் கிடைக்கும்

6.5.2026 – புதன் சென்னை கேசவ பெருமாள் தங்கத் தொட்டியில் சூர்ணாபிஷேகம்

சென்னை தேவராஜ முதலி தெருவில் (சௌகார்பேட்டை) அமைந்துள்ள சென்னகேசவ பெருமாள் கோவில் சென்னப் பட்டினம் என்ற பெயர் வரக் காரணமாக இருந்த பழமையான கோவில்களில் இதுவும் ஒன்று. இங்கு இன்று நடைபெறும் தங்கத் தொட்டில் சூர்ணாபிஷேகம் மிகவும் விசேஷமானது.அக்னி நட்சத்திரத்தின் வெம்மையைத் தணிக்க, பெருமாளுக்கு ஜலக்ரீடை (நீராடல்) உற்சவம் சிறப்பாக நடைபெறும். இதில் ஒரு பகுதியாகத் தங்கத் தொட்டியில் வாசனைத் திரவியங்கள் கலந்த புனித நீரால் பெருமாளுக்குத் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படும்.‘சூர்ணம்’ என்பது நறுமணப் பொடி (சந்தனம், குங்குமப்பூ, ஏலக்காய் போன்றவை கலந்த பொடி). இந்தப் பொடியைப் புனித நீரில் கலந்து பெருமாளுக்கு அபிஷேகம் செய்வதே சூர்ணாபிஷேகம் எனப்படுகிறது.இக்கோவிலில் உள்ள கலைநயமிக்க தங்கத் தொட்டியில் பெருமாளை எழுந்தருளச் செய்து, அவருக்கு குளிர்ச்சி யான உபசாரங்கள் செய்யப்படுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் விழா தொடக்கம்

ஆண்டின் 12 மாதங்களும் சிறப்பாக திருவிழாக்கள் நடைபெறும் திருக்கோயில் ஸ்ரீரங்கம். பங்குனியில் ஆதி பிரம்மோற்சவம் நடந்த கையோடு சித்திரைத் தேர் உற்சவம் இன்று தொடங்குகிறது. ஸ்ரீரங்கத்தில் சித்திரைத் தேர் திருவிழா வழக்கமாக 11 நாட்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த நாட்களில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். திருவிழாவின் 11-ஆம் திருநாள் அன்று நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்

7.5.2026 – வியாழன் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் தேர்

பெரம்பலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் சித்திரை பெருந்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிக விமரிசையாக நடைபெறும். இவ்விழா பூச்சொரிதல் உற்சவமாத் தொடங்கும் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 10:00 மணிக்கு நடைபெறும் தொடர்ந்து நாளை ஊஞ்சல் உற்சவமும், நாளை மறுநாள் விடை யாற்றியும் நடைபெறும்.

Tags : Chitra ,Chitra Pournami ,Vaigai River ,Ramarayar Hall ,
× RELATED சித்ரா பெளர்ணமி சிறப்புகள்