திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று 2 இடங்களில் நடைபெற்ற சம்பவத்தில் கோயில் திருவிழாவுக்கு கொண்டுவரப்பட்ட யானைகள் மிதித்து பாகன் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பாகன்கள் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சூர் அருகே உள்ள இரிஞ்சாலக்குடாவில் பிரசித்தி பெற்ற கூடல் மாணிக்கம் கோயில் உள்ளது. இக்கோயிலில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவுக்காக காசிநாதன் என்ற யானை கொண்டுவரப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு திருவிழா நடந்து கொண்டிருந்த போது இந்த யானை லேசாக மிரண்டது.
உடனடியாக பாகன்களான ஸ்ரீகுட்டன் (25) மற்றும் அமல் (28) ஆகியோர் சேர்ந்து யானையை கட்டுக்குள் கொண்டு வந்து அருகிலுள்ள ஒரு கொட்டகையில் கட்டிப்போட்டனர். நேற்று மதியம் அந்த யானை மீண்டும் மிரண்டு கொட்டகையை சூறையாடியது. இதைத்தொடர்ந்து பாகன்கள் ஸ்ரீகுட்டனும், அமலும் சேர்ந்து யானையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். ஆனால் அந்த யானை அவர்கள் இருவரையும் தும்பிக்கையால் பலமாக தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் இரிஞ்சாலக்குடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பாகன் ஸ்ரீகுட்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல எர்ணாகுளம் அருகே உள்ள அங்கமாலி கிடங்கூர் மகாவிஷ்ணு கோயில் திருவிழாவுக்காக கொண்டுவரப்பட்ட பார்த்தசாரதி என்ற யானை மிதித்து அந்த யானையை கொண்டு வந்த லாரி டிரைவரான விஷ்ணு என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த யானையின் பாகனான பிரதீப் காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை குளிப்பாட்டும் போது இந்த யானை திடீரென மிரண்டு ஓடியது. வழியில் இருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களை இந்த யானை சூறையாடியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் அந்த யானை பலியான லாரி டிரைவர் விஷ்ணுவின் உடலுக்கு அருகிலேயே நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து அறிந்த போலீஸ், வனத்துறை மற்றும் அதிவேக அதிரடிப்படையினர் அங்கு விரைந்து சென்றனர். நீண்ட நேரம் போராடியும் அந்த யானையை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதைத் தொடர்ந்து மயக்க ஊசி செலுத்திய பின்னரே அந்த யானை கட்டுக்குள் வந்தது.
