×

லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் சுமைதூக்குபவருக்கு வலிப்பு : காவல்துறை எச்சரிக்கை

சென்னை: லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் சுமைதூக்கும் நபருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து பொய்யான தகவல்களை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 24ம் தேதி அதிகாலை சுமார் 1 மணிக்கு, லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில், வில்லிவாக்கம் தொகுதிக்கு சுமைதூக்கும் வேலை செய்து கொண்டிருந்தபோது, சீனிவாசன் (45) என்பவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அங்கு பணியிலிருந்த மருத்துவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து மேல் சிகிச்சைக்காக, பாதிக்கப்பட்ட சீனிவாசன் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கே.எம்.சி. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பாகவும், தவறாகவும், பொய்யான அவதூறு கருத்துக்களும் பகிரப்பட்டு வருவதால், இது குறித்து சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தவறான கருத்துக்கள் பகிர்வது சட்டப்படி குற்றம் ஆகும். ஆகவே, மேற்படி சம்பவம் குறித்து, உண்மைக்கு புறம்பாக, சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட வேண்டாம். இது போன்ற உண்மைக்கு புறம்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை உண்மைத்தன்மையை அறியாமல் பகிர வேண்டாம், மீறி வதந்திகள் பதிவிடும் நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Loyola College ,centre ,Chennai ,Chennai Police ,
× RELATED தமிழெனும் ஆயுதமேந்தி இனமானம் உரைத்த...