×

ஹைதராபாத் – மும்பை அதிவேக ரயில் திட்டம்: தெலுங்கானா அரசின் புதிய முயற்சி!

ஹைதராபாத்: தெலுங்கானா அரசு மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், ஹைதராபாத்தை மையமாக கொண்டு பிரம்மாண்டமான அதிவேக ரயில் வலைப்பின்னலைத் திட்டமிட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஹைதராபாத் – புனே – மும்பை இடையேயான சுமார் 761 கி.மீ நீள அதிவேக ரயில் வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தற்போது தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் குறித்து ஆய்வு செய்த சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறை அமைச்சர், இது ஒரு “கேம் சேஞ்சர்” திட்டமாக அமையும் என்றும், இதன் மூலம் மும்பை மற்றும் ஹைதராபாத் இடையிலான பயண நேரம் வெறும் மூன்று மணிநேரத்திற்குக் குறைவாகக் குறையும் என்றும் தெரிவித்தார்.

இந்த அதிவேக ரயில் வழித்தடமானது மணிக்கு 320 முதல் 330 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வழிநெடுகிலும் 10 முதல் 12 நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. கட்டுமானப் பணிகளில் மேம்பாலப் பாதைகள், தரைவழிப் பாதைகள் மற்றும் சில இடங்களில் சுரங்கப் பாதைகளும் இடம்பெறும்; குறிப்பாக விகாராபாத் பகுதியில் சுமார் 4-5 கி.மீ நீளத்திற்கு ஒரு சுரங்கப்பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான ஒட்டுமொத்த செலவு சுமார் ரூ. 2 லட்சம் கோடி வரை இருக்கும் என்று ஆரம்பகட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

தற்போது திட்ட அறிக்கை தயாராக உள்ள நிலையில், ஒன்றிய அரசின் ஒப்புதல் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்பைப் பெற தெலுங்கானா அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. தேவையான நிதியுதவி மற்றும் அனுமதிகள் சரியான நேரத்தில் கிடைத்தால், 2027-ன் பிற்பகுதியில் அல்லது 2028-ன் தொடக்கத்தில் இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணிகள் முழுமையடைய 6 முதல் 8 ஆண்டுகள் வரை ஆகலாம் என்பதால், 2030-களின் இடைப்பகுதியில் இந்த அதிவேக இரயில் சேவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Hyderabad ,Mumbai ,Telangana Government ,Pune ,
× RELATED “கிழக்கின் சொர்க்கம்”.. சுற்றுலாப்...