×

ரிஷிவந்தியம், வாணாபுரம் பகுதியில் தார்பாய் மூடாமல் செல்லும் டிப்பர் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம்

*நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ரிஷிவந்தியம் : கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் மற்றும் வாணாபுரம், பகண்டை கூட்டு சாலை பகுதியில் கிராவல் மண், எம்.சாண்ட், செங்கல் ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகள் தார்பாய் மூடாமல் செல்வதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படுமோ என்று அச்சமடைந்துள்ளனர்.வாணாபுரம் தாலுகாவை ஒட்டி சங்கராபுரம் மற்றும் திருவண்ணாமலை பகுதியில் பல்வேறு இடங்களில் கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த குவாரிகளிலிருந்து வீடு கட்டுமான பணிகளுக்கும் மற்றும் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்கும் கிராவல் மண் எடுக்கப்படுகிறது, அதேபோல் ஜல்லி கற்கள், எம்.சாண்ட் மற்றும் கிராவல் மண் ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகள் தார்பாயால் மூடாமல் அதிவேகமாக செல்கின்றன.

இந்த லாரியில் இருந்து பறக்கும் தூசி பின்னால் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கண்களில் பட்டு விபத்துகளில் சிக்கி வருகின்றனர். தார்பாய் மூடாமல் செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் போக்குவரத்து போலீசார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

எனவே, அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் இரு துறை அதிகாரிகள் ரிஷிவந்தியம் மற்றும் வாணாபுரம், பகண்டை கூட்டு சாலை பகுதியில் ஆய்வு செய்து விதிகளை மீறும் டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Rishivanthiyam ,Vanapuram ,Kallakurichi district ,Bagandai ,
× RELATED பைக்காரா, பார்சன்ஸ்வேலியில் 13வது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீ