×

டெல்லி மதுபான ஊழல் வழக்கு பெண் நீதிபதி முன் ஆஜராக மறுத்து கெஜ்ரிவால் கடிதம்

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், 2024ம் ஆண்டு முதல் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா முன்னிலையில் இனிமேல் ஆஜராகப் போவதில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்வருமான கெஜ்ரிவால் அதிரடியாக முடிவெடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டெல்லி உயர் நீதிமன்ற பெண் நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மாவிடம் இருந்து எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை முற்றிலுமாக சிதைந்துவிட்டது. அதனால் மகாத்மா காந்தியின் சத்யாகிரகப் பாதையைப் பின்பற்ற முடிவு செய்துள்ளேன். எனது மனசாட்சியின் குரலுக்குச் செவிசாய்த்து இந்த முடிவை எடுத்துள்ளேன். நான் சட்டரீதியான அச்சத்தின் அடிப்படையில் முன்வைத்த நியாயமான கோரிக்கையானது, தங்கள் மீது தொடுக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட தாக்குதலாகவும், நீதித்துறை என்ற நிறுவனத்தின் மீதே நடத்தப்பட்ட ஒரு தாக்குதலாகவும் கருதப்பட்டு, அதற்குரிய வகையிலேயே பதிலளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இப்போது பரவலான பொது விவாதப் பொருளாக மாறியுள்ளது. சிலர் என்னை நீதித்துறைக்கு எதிரானவர் என்று சித்தரிக்கக்கூடும் என்ற உண்மையை நானும் நன்கு உணர்ந்திருக்கிறேன். இந்த வழக்கில் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்படும் வாதங்களின் விளைவாக, சட்டரீதியான பாதகமான பின்விளைவுகள் ஏற்படக்கூடும். அந்தப் பின்விளைவுகளைச் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Kejriwal ,Delhi liquor scandal ,New Delhi ,Delhi High Court ,Justice ,Swarna Kantha Sharma ,Swarna Kanta Sharma ,National Coordination of the Yes Atmi Party ,Delhi ,
× RELATED தமிழக கவர்னர் ஊட்டிக்கு நாளை செல்கிறார்