×

அதிமுக 28 தொகுதிக்கும் குறைவாகவே ஜெயிக்கும்: செல்வப்பெருந்தகை பேட்டி

கொடைக்கானல்: தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக 28 தொகுதிக்கும் குறைவாகவே ஜெயிக்கும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தனது குடும்பத்தினருடன் ஓய்வுக்காக வந்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று அளித்த பேட்டி: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக தலைமையில் தேர்தலை சந்தித்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் எழுதியுள்ள மகத்தான தீர்ப்பு மே 4ம் தேதி வெளியாகும். 200 தொகுதிகளுக்கு மேல் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெறும்.

மீண்டும் முதல்வராகி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என முழங்குவார். என் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை பற்றிய வெளிப்படைத்தன்மை இல்லாதது ஏன்? தற்போது வீடியோ ஆதாரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுபோல பாஜ, அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளின் வீட்டில் ஏன் சோதனை நடத்தப்படவில்லை? இது பற்றிய வெள்ளை அறிக்கையை சோதனை செய்தவர்கள் வெளியிட வேண்டும்.

5 ஆண்டுகள் முதல்வர் சக்தியை மீறி உழைத்துள்ளார். காலை உணவு திட்டம், நூற்றாண்டுகளுக்கு பின்பும் பேசப்படும். இது யதார்த்தமான உண்மை. எதுவுமே செய்யாமல் அமைச்சரவை பட்டியல் வெளியிடுபவர்களைப் பற்றி என்ன சொல்ல முடியும்? எங்கள் கூட்டணியில் தான் 50 சதவீதம் மேல் வாக்கு வங்கி உள்ளது. தேமுதிக, மக்கள் நீதி மையம், சமுதாயம் சார்ந்த அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து மிக பலமான கூட்டணியை அமைத்து உள்ளது.

ராகுல் காந்தி, ஐந்து மாநில தேர்தலில் கவனம் செலுத்தி வந்த நிலையில் அசாம், மேற்குவங்க தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அங்கு தனது பரப்புரையை மேற்கொண்டார். அசாம், மேற்கு வங்கம் தான் எங்கள் டாஸ்க். என் அன்பு சகோதரர் ஸ்டாலினை விலைக்கு வாங்க முடியாது என்று ராகுல் காந்தி கூறி உள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்கும் போது அவரது பதவி ஏற்பு விழாவில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். எதிர்கட்சி வரிசையில் காங்கிரஸ் தான் அமரும். காங்கிரஸ் வெற்றி பெறும் அளவிற்கு கூட அதிமுக வெற்றி பெற முடியாது. 28 தொகுதிகளுக்கும் குறைவாகத்தான் அதிமுக வெற்றி பெறும். இவ்வாறு தெரிவித்தார்.

Tags : AIADMK ,Selvapperundhagai ,Kodaikanal ,Tamil Nadu Assembly elections ,Tamil Nadu Congress Party ,Kodaikanal, Dindigul district ,
× RELATED சொந்த ஊர்களில் சட்டசபை தேர்தலுக்கு...