வாஷிங்டன்: வாஷிங்டனில் உள்ள ஓட்டலில் இரவு விருந்து நிகழ்ச்சியின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு துப்பாக்கியுடன் வந்த நபரை பிடித்ததால், அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலானியா, துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள ஹில்டன் ஓட்டலில் வெள்ளைமாளிகை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் வருடாந்திர இரவு விருந்து நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது.
2வது முறையாக அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப், பல முன்னணி பத்திரிகைகளை கடுமையாக விமர்சிக்கிறார். பத்திரிகை நிறுவனங்களுக்கு எதிராக சட்டப்பிரச்னையில் ஈடுபட்டுள்ளதோடு, நிருபர்களுடன் டிரம்ப் விரோத போக்கை கடைபிடித்து வருகிறார். இந்த சூழலில், முதல் முறையாக டிரம்ப் அதிபராக, பத்திரிகையாளர்கள் சங்கத்தின் இரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதித்தார். இதற்கு முன் 2011 மற்றும் 2015ல் அவர் இவ்விருந்தில் தனிப்பட்ட நபராக மட்டுமே பங்கேற்றுள்ளார்.
இதனால், இம்முறை இரவு விருந்தில் டிரம்ப் உரையாற்ற இருப்பது வெகுவாக கவனிக்கப்பட்டது. அதே சமயம், ஈரான் போர், பாலஸ்தீன விவகாரம், பத்திரிகை சுதந்திரமின்மை ஆகியவற்றை கண்டித்து ஹில்டன் ஓட்டலுக்கு வெளியே சிலர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இரவு சுமார் 8.30 மணி அளவில் அதிபர் டிரம்ப் தனது மனைவி மெலானியாவுடன் இரவு விருந்து நடக்கும் நடன மண்டபத்திற்கு வந்தார். மேடையில் டிரம்ப் உடன் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், எப்பிஐ இயக்குநர் காஷ் படேல், டிரம்பின் தலைமை ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் இருந்தனர்.
விருந்தில் அமைச்சர்கள், பல சர்வதேச ஊடக பத்திரிகையாளர்கள், பிரபலங்கள் என சுமார் 2,300 பேர் பங்கேற்றனர். விருந்து தொடங்கிய சில நிமிடங்களில், விருந்து மண்டபத்தின் வெளியே வரவேற்பு பகுதியில் திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. இதனால், விருந்து மண்டபத்தில் இருந்தவர்கள் பீதி அடைந்தனர். அடுத்தடுத்து துப்பாக்கி தோட்டா வெடிக்கும் சத்தம் கேட்டதால் அந்த இடமே கலவர பூமியாக மாறியது. விருந்தினர்கள் அனைவரும் உயிர் தப்பிக்க உணவருந்தும் மேஜைக்கு அடியில் தஞ்சமடைந்தனர்.
விருந்து மேடையில் இருந்தவர்கள் பதற்றத்துடன் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியாவை சூழ்ந்து கொண்டனர். துப்பாக்கி சத்தம் கேட்ட உடனேயே உஷாரான அமெரிக்க ரகசிய பாதுகாப்பு சேவை படையினர் அதிரடியாக மண்டபத்திற்குள் நுழைந்தனர். முதலில் துணை அதிபர் ஜே.டி.வான்சை அங்கிருந்து அப்புறப்படுத்திய அவர்கள், அடுத்ததாக அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலானியாவை பாதுகாப்பு கேடயமாக சூழ்ந்து பத்திரமாக மீட்டுச் சென்றனர்.
மேஜையிலிருந்து எழுந்ததும் பதற்றத்தில் தட்டுத்தடுமாறி விழுந்த டிரம்பை அருகிலிருந்தவர்கள் கையை பிடித்துக் கொண்டு பக்கத்து அறைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் டிரம்பும் அவரது மனைவியும் ஹில்டன் ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட்டு வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சிறிது நேரத்தில் விருந்து பகுதி போர்க்களமாக மாறியது. இந்த பயங்கர சம்பவத்தில் அதிபர் டிரம்ப் உட்பட யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
தேசிய பாதுகாப்பு படையினரும் பிற அதிகாரிகளும் ஹில்டன் ஓட்டலை முற்றிலும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். விருந்தினர்கள் அனைவரும் மண்டபத்தில் இருந்து பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். அதே சமயம், துப்பாக்கியுடன் விருந்து மண்டபத்திற்குள் நுழைய முயன்ற சந்தேக நபரை பாதுகாப்பு படையினர் தரையில் தள்ளி இழுத்து பிடித்தனர். அவரிடமிருந்து நீண்ட துப்பாக்கியுடன் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அவர், கலிபோர்னியாவின் டோரன்ஸ் பகுதியைச் சேர்ந்த 31 வயதான கோல் தாமஸ் ஆலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். வரவேற்பு பகுதிக்குள் நுழைந்ததும் அவர் அங்கிருந்து பாதுகாப்பு படை வீரர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அந்த வீரர் குண்டு துளைக்காத உடை அணிந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவத்தில் கோல் தாமஸ் ஆலன் தனிநபராக தாக்குதல் நடத்தியதாக நம்புவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆனால் அவரது இலக்கு யார், எந்த நோக்கத்திற்காக துப்பாக்கி சூடு நடத்தினார் என்பது தெரியவில்லை. ஆலனை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் விசாரணை நடத்திய பிறகே இதுதொடர்பான தகவல்கள் வெளியாகும் என காவல்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர். அதிபர் டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்து நிகழ்ச்சியில் நடந்த இந்த துப்பாக்கி சூடு சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

* திக்… திக்… நிமிடங்கள்
* விருந்தினர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக விருந்தை தொடங்கிய சில நிமிடங்களில் துப்பாக்கி சூடு சத்தம் கேட்டது.
* முதலில் தட்டு கீழே விருந்ததில் சத்தம் கேட்டதாக நினைத்ததாக அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.
* சுமார் 5 முதல் 8 துப்பாக்கி குண்டுகள் சுடப்பட்டதாக பத்திரிகையாளர்கள் கூறினர்.
* துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும் அமெரிக்க ரகசிய சேவைப் படையினர் அதிரடியாக விருந்து மண்டபத்திற்குள் நுழைந்து அறையை சூழ்ந்து கொண்டனர். அப்போதுதான் ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதை அங்கிருந்த பலரும் உணர்ந்தனர்.
* நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் உடனடியாக தொலைபேசி மூலம் தகவல்களைத் தெரிவிக்கத் தொடங்கினர்.
* பாதுகாப்பு படையினர் துப்பாக்கியுடன், ‘‘வழி விடுங்கள், எல்லோரும் குனிந்து கொள்ளுங்கள்’ என கத்தியபடி முன்னேறி சென்றனர்.
* ஓட்டலுக்கு வெளியே, ஹெலிகாப்டர்கள் மேலே வட்டமிட்டுக் கொண்டிருக்க, தேசிய பாதுகாப்புப் படையினரும் பிற அதிகாரிகளும் அப்பகுதியை முற்றுகையிட்டனர்.
* டிரம்ப் வெளியேற்றப்பட்டதும், அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. ஹில்டன் ஓட்டலுக்கு வெளியே காவல் துறையினர் பெரும் எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டனர்.
* பிரதமர் மோடி கண்டனம்
பிரதமர் மோடி எக்ஸ் பதிவில், ‘‘வாஷிங்டனில் உள்ள ஓட்டலில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து, அதிபர் டிரம்ப், அவரது மனைவி மற்றும் துணை அதிபர் ஆகியோர் பாதுகாப்பாகவும் காயமின்றியும் உள்ளனர் என்பதை அறிந்து நிம்மதி அடைந்தேன். அவர்கள் தொடர்ந்து பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்க எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. அது சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும்’’ என கூறி உள்ளார்.
* ரீகன் சுடப்பட்ட பிறகும் பாதுகாப்பில் அலட்சியம்
அமெரிக்க அதிபர்கள் பங்கேற்கும் முக்கிய நிகழ்வுகள் வாஷிங்டன் ஹில்டன் ஓட்டலில் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 45 ஆண்டுகளுக்கு முன் 1981 மார்ச் 30ம் தேதி ஹில்டன் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றி விட்டு வெளியே வந்த அப்போதைய அதிபர் ரொனால்ட் ரீகன் மீது ஒருநபர் துப்பாக்கியால் சுட்டார். 6 தோட்டாக்களில் ஒன்று ரீகனின் மார்பு பகுதியில் தாக்கியது. 12 நாள் சிகிச்சைக்கு பிறகு ரீகன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு ஹில்டன் ஓட்டலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தப்பட்டது. திட்டமிட்டபடியே பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்ததாக காவல் துறையினர் கூறுகின்றனர். ஆனால் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பாதுகாப்பு குறைபாடே இதற்க காரணம் என்றும் குறை கூறி உள்ளனர். விருந்திற்கு வந்தவர்களின் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை காவல்துறை அதிகாரிகள் மிக அலட்சியமாக ஆய்வு செய்ததாக கூறி உள்ளனர்.
* நல்லாசிரியர், அறிவாளி பிடிபட்டவரின் பின்னணி
துப்பாக்கி சூடு நடத்தியதாக பிடிபட்ட சந்தேக நபர் கலிபோர்னியாவின் டோரன்ஸ் பகுதியை சேர்ந்த 31 வயதான கோல் தாமஸ் ஆலன். இவர் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிப்பவர். புகழ்பெற்ற கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் பட்டம் பெற்ற இவர், டோரன்ஸ் நகரில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மிகவும் திறமைசாலி. சக்கர நாற்காலிகளுக்கான புதிய வகை அவசரகால பிரேக்கின் முன்மாதிரியை உருவாக்கி இருக்கிறார். சி2 எஜுகேஷன் என்ற நிறுவனத்தில் கடந்த 6 ஆண்டுகளாக அவர் பணியாற்றி வருகிறார்.
2024ம் ஆண்டில் நிறுவனத்தின் மாதத்தின் சிறந்த ஆசிரியராக கவுரவிக்கப்பட்டுள்ளார். ஆன்லைன் கேம் உருவாக்குவதில் விருப்பம் கொண்டவரான ஆலன், விண்வெளியில் நடக்கும் புதிய வகை டாப்-டவுன் ஷூட்டர் சண்டை கேமை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனார். 2024ல் அதிபர் பதவிக்கான தேர்தலின் போது கமலா ஹாரிசை ஆதரிக்கும் ஜனநாயக கட்சிக்கு ஆலன் 25 டாலர் நன்கொடையாக வழங்கி உள்ளார். பிடிபட்ட போது அவரிடம் ஒரு ஷாட் கன், கைத்துப்பாக்கி மற்றும் பல கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
* மீண்டும் விருந்தை தொடர முயன்ற டிரம்ப்
துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகும் இரவு விருந்து நிகழ்ச்சியை தொடர டிரம்ப் விரும்பினார். இதனால், ஓட்டல் ஊழியர்கள் மேடையில் அதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினர். பின்னர் ரகசிய சேவைப் பிரிவு அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்ப அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிகழ்ச்சியை மீண்டும் நடத்துவேன் என டிரம்ப் கூறி உள்ளார்.
* உலக தலைவர்கள் கண்டனம்
இந்த தாக்குதல் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்ததாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறியுள்ளார். இந்த தாக்குதல் ஏற்றுக் கொள்ள முடியாதது என கூறியிருக்கும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், டிரம்புக்கு தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார்.
இத்தாலி அதிபர் ஜார்ஜியா மெலோனி, டிரம்ப்புடன் அடிக்கடி கருத்து மோதல்களில் ஈடுபட்டுள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், தென்கொரியா அதிபர் லீ ஜே மியுங், ஜப்பான் பிரதமர் சனே டகாயிச்சி, இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு, மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷைன்பாம், ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ், அமெரிக்கப் படைகளால் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து வெனிசுலாவின் தற்காலிக அதிபராகப் பொறுப்பேற்ற டெல்சி ரோட்ரிக்ஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
* 3வது முறையாக உயிர் தப்பினார்
அதிபர் டிரம்பை குறிவைத்து நடத்தப்படும் 3வது துப்பாக்கி சூடு இது. இதற்கு முன் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் 2 முறை அவர் குறிவைக்கப்பட்டுள்ளார். 2024ம் ஆண்டு ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் பட்லர் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்த போது தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற 20 வயது வாலிபர் அருகிலிருந்த கட்டிடத்தின் கூரையிலிருந்து டிரம்பை துப்பாக்கியால் சுட முயன்றார்.
இதில் டிரம்பின் வலது காதின் மேல் பகுதியை தோட்டா துளைத்தது. கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் பலியானார். 2 பேர் காயமடைந்தனர். தாமஸ் மேத்யூவை பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றனர். அதே போல, 2024 செப்டம்பரில் புளோரிடாவில் கோல்ப் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த டிரம்பை ரயான் ரூத் என்பவர் துப்பாக்கியுடன் மறைந்திருந்து சுட முயன்றார். பாதுகாப்பு படையினர் விரட்டியதில் தப்பிச் சென்ற அவர் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
* கோட்டை விட்டது எங்கே?
பல ஆண்டுகளாக பத்திரிகையாளர்களின் இரவு விருந்து நடைபெறும் ஹில்டன் ஓட்டலில், வழக்கமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். ஓட்டல் முழுவதையும் விட விருந்து நடைபெறும் நடன மண்டபத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்தப்படும். அந்த மண்டபத்திற்குள் நுழைபவர்கள் மட்டுமே கடுமையாக பரிசோதிக்கப்படுவார்கள்.
மற்றபடி ஓட்டலில் தங்கியுள்ள நபர்கள், விருந்து பகுதிக்குள் நுழையாதவர்களுக்கு பெரிய அளவில் சோதனை செய்யப்படுவதில்லை. துப்பாக்கியுடன் வந்த நபர் அதே ஓட்டலில் ஏற்கனவே அறை எடுத்து தங்கியிருந்தார். அதனால், துப்பாக்கியுடன் எளிதாக வரவேற்பு பகுதி வரையிலும் நுழைந்து விட்டார்.
* வீடியோ வெளியிட்ட டிரம்ப்
துப்பாக்கியுடன் சந்தேக நபர் வரவேற்பு பகுதியில் நுழைந்த போது பதிவான சில வீடியோ காட்சிகளை டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில் நேற்று வெளியிட்டார். அதில் அந்த நபர் பாதுகாப்பு தடுப்புகளை கடந்து ஓடுவதும், ரகசிய சேவை வீரர்கள் அவரை நோக்கி ஓடுவதும் காட்டப்பட்டது.
கவச உடை அணிந்த அதிகாரிகளை சந்தேக நபர் துப்பாக்கியால் சுட்டார். பின்னர் அவரை தரையில் வீழ்த்திய காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சம்பவத்தின் வெளிப்படைத்தன்மை கருதி இவ்வீடியோவை வெளியிட்டதாக டிரம்ப் கூறி உள்ளார்.
* ஈரானுக்கு தொடர்பு? டிரம்ப் அதிர்ச்சி தகவல்
ஹில்டன் சம்பவத்தை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த அதிபர் டிரம்ப், ‘‘ரகசிய சேவை மற்றும் இதர அதிகாரிகள் சிறப்பான பணியை செய்தனர். அவர்கள் விரைவாகவும் தைரியத்துடனும் செயல்பட்டனர். துப்பாக்கியுடன் வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வரவேற்பு பகுதியில் காவல் அதிகாரி ஒருவரை மிக நெருக்கத்தில் இருந்தபடி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
அந்த அதிகாரி குண்டு துளைக்காத உடை அணிந்திருந்ததால் தப்பினார். அவர் மிகவும் உற்சாகத்துடன் இருக்கிறார். இந்த சம்பவத்திற்கும் ஈரான் போருக்கும் தொடர்பிருக்கிறதா என எனக்கு தெரிவியல்லை. எனக்கு தெரிந்த வரையில் அப்படி நான் நினைக்கவில்லை. ஆனால் யாருக்கு தெரியும். ஈரான் போரில் வெற்றி பெறப் போவதில் இருந்து இது என்னை தடுக்கப் போவதில்லை. இது தனிநபர் தாக்குதலாக இருக்கலாம். விரைவில் உண்மையை கண்டுபிடிப்போம்’’ என்றார்.

