×

வாக்கு எண்ணும் மையங்கள் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு கலெக்டர் தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு வரும் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது திருவண்ணாமலை, ஆரணியில் 8 தொகுதிகளுக்கு

திருவண்ணாமலை, ஏப். 25: திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைத்த அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அங்கு, துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, செங்கம், கீழ்ெபன்னாத்தூர், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய 8 தொகுதிகளில் 89.57 சதவீதம் வாக்குகள் பதிவானது.

அதைத்தொடர்ந்து வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகை ரசீது இயந்திரங்கள் (விவிபேட்) மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் பயன்படுத்திய ஆவணங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் விடிய விடிய நேற்று அதிகாலை வரை கொண்டுவரப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களில் சேர்க்கப்பட்டன. அதன்படி திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டி வளாகத்தில், திருவண்ணாமலை, செங்கம், கலசபாக்கம், கீழ்பென்னாத்தூர் ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. எனவே சம்மந்தப்பட்ட 4 தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், நான்கு தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் ஆரணி தச்சூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தில், ஆரணி, போளூர், செய்யாறு, வந்தவாசி தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. எனவே, சம்மந்தப்பட்ட நான்கு தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனித்தனி அறையில் வைக்கப்பட்டு, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் நேற்று காலை சீல் வைக்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள பாதுகாப்பு அறையில் (ஸ்டார்ங் ரூம்) காற்றுப்புகாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு அறைகளில் மின் கசிவு விபத்தை தவிர்க்க மின் இணைப்புகளை துண்டிக்கப்பட்டுள்ளன. வளாகத்தின் மற்ற பகுதிகளில் ராட்சத மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள வளாகம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதனை, வாக்கு எண்ணும் மையம், கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், தேர்தல் ஆணைய அலுவலகம் ஆகிய இடங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து கண்காணிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அதோடு வாக்கு எண்ணும் மையங்களில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வேட்பாளர்களின் முகவர்கள் தங்கியிருந்து கண்காணிக்க வசதி செய்துள்ளனர். அங்கு, பாதுகாப்பு அறைகளை சிசிடிவி பதிவுகள் மூலம் கண்காணிக்கலாம். மேலும் வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் உள்பட 400 பேர் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் நேற்று காலை கலெக்டர் தர்ப்பகராஜ், எஸ்பி சுதாகர் மற்றும் தேர்தல் பொது பார்வையாளர்கள் ஆகியோர் நேரடி ஆய்வு செய்தனர். அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டதை உறுதி செய்தனர்.

அதோடு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் வரை, அதிகாரிகள் உள்ளிட்ட யாரையும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறை அருகே அனுமதிக்கக்கூடாது, வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட வரும் தேர்தல் பணி அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரங்கள் முழுவதும் முறையாக பதிவேடுகளில் பராமரிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தடையில்லா மின்சாரத்துக்காக, ராட்சத ஜெனரேட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ம் தேதி வரை இந்த பாதுகாப்பு தொடர விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags : Collector ,Dharbagaraj ,Tiruvannamalai ,Arani ,
× RELATED மர்ம நபர்கள் வைத்த தீயால் எரிந்த பனை...