கவுகாத்தி: அசாம் முதல்வர் மனைவியின் பாஸ்போர்ட் விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. பாஜக மூத்த தலைவரான அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மனைவியான ரினிகி புயான் சர்மா மீது, கடந்த 4ம் தேதியன்று காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ரினிகி 3 நாடுகளின் பாஸ்போர்ட்களை சட்டவிரோதமாக வைத்திருப்பதாகவும், துபாய் மற்றும் அமெரிக்காவில் சொகுசு பங்களாக்கள் வைத்திருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இதனைத் தொடர்ந்து, ரினிகி புயான் சர்மா அளித்த புகாரின் அடிப்படையில், கவுகாத்தி குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கைதாவதை தவிர்க்க, தெலுங்கானா உயர்நீதிமன்றத்தை அணுகிய அவருக்கு கடந்த 10ம் தேதி ஒரு வார கால இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கடந்த 15ம் தேதி உச்சநீதிமன்றம் தடை விதித்ததுடன், உரிய நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து, கடந்த 20ம் தேதி கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் பவன் கேரா முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், பவன் கேராவின் முன்ஜாமீன் மனுவை கவுகாத்தி உயர்நீதிமன்ற நீதிபதி பார்த்திவ்ஜோதி சைக்கியா தலைமையிலான அமர்வு, இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பவன் கேரா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி வாதாடுகையில், ‘அரசியல் உள்நோக்கத்துடன் தேர்தல் நேரத்தில் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது வெறும் அவதூறு வழக்கு மட்டுமே, இதில் கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை’ என்று கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அசாம் அரசு தரப்பு வக்கீல், ‘இந்த விவகாரத்தில் போலி ஆவணங்கள் தயாரித்திருப்பது தொடர்பாக கூடுதல் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், இவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும்’ என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார். மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் பவன் கேராவை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
